Homeசெய்திகள்பூங்காவிற்கு ரூ.1 கோடி செலவிடப்பட்டதில் முறைகேடு?

பூங்காவிற்கு ரூ.1 கோடி செலவிடப்பட்டதில் முறைகேடு?

திருவண்ணாமலையில் தோட்டக்கலை பூங்காவிற்கு ரூ.1 கோடி செலவு செய்யப்பட்டது குறித்து கணக்குகளை ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அரசு கலைக்கல்லூரி எதிரில் அண்ணாமலை மலையடிவாரத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் 9 ஏக்கர் பரப்பளவில் 2019-20ம் ஆண்டில் ரூ.1கோடி மதிப்பீட்டில் அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

பூங்காவிற்கு ரூ.1 கோடி செலவிடப்பட்டதில் முறைகேடு?

இப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அந்த பூங்காவிற்கு இன்று கலெக்டர் பா.முருகேஷ் சென்று பார்வையிட்டார். அப்போது செய்து முடிக்கப்பட்டதாக கூறப்பட்ட பணிகளை பார்த்து அதிருப்தி அடைந்தார்.

பூங்காவில் குடிதண்ணீர் வசதி, கழிப்பிட வசதி செய்து தரப்படாமல் இருப்பதையும், தரையில் விரிசல் இருப்பதையும், செடிகள் பராமரிப்பு இல்லாமல் இருந்ததையும், தண்ணீர் பைப் ஒன்று உடைந்து விழுந்து கிடப்பதையும், ஒரு பகுதியில் செடிகளே இல்லாமல் இருப்பதையும், காட்டு பன்றி, மான்கள் நுழையாமல் இருக்க சுற்றுச்சுவர் கட்டப்படாமல் இருப்பதையும் பார்த்தார்.

ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டதாக கூறப்பட்ட குழந்தைகள் விளையாடும் இடம் இல்லாததை பார்த்து கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். அந்த பணம் எங்கே? என கேட்டதற்கு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் சரிவர பதிலளிக்கவில்லை. மொத்தத்தில் பூங்கா பராமரிப்பு இன்றி இருப்பதாக தெரிவித்த கலெக்டர் ஒப்பந்ததாரர் எங்கே? என கேட்டார். அவர் சென்னையில் இருப்பதாக உதவி இயக்குநர் தெரிவித்தார். அவருக்கு பில் தர வேண்டியது உள்ளதா? என கலெக்டர் கேட்டதற்கு பில்கள் அனைத்தும் தரப்பட்டு விட்டது என பதில் வரவே குட்டிச்சுவராக போய் விட்டது என வெறுப்புடன் கலெக்டர் கூறினார்.

பூங்காவிற்கு ரூ.1 கோடி செலவிடப்பட்டதில் முறைகேடு?

இந்த பூங்காவிற்கான பைல் மொத்தத்தையும் பூங்காவிற்கான உயர் அதிகாரி தன்னிடம் எடுத்து வரவேண்டும் என உத்தரவிட்ட கலெக்டர் முருகேஷ், இந்த பூங்காவிற்கு ரூ.1 கோடி செலவிடப்பட்டது குறித்து வெளியிலிருந்து ஆடிட்டர்களை வரவழைத்து கணக்கு பார்க்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

பூங்காவிற்கு ரூ.1 கோடி செலவு செய்யப்பட்டது குறித்தும், பூங்காவின் தரம் குறித்தும் ஆய்வு செய்யவும், குழந்தைகள் பூங்கா உள்பட பணிகள் செய்யாமல் இருப்பது குறித்தும் தோட்டக்கலைத் துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்ப கலெக்டர், தனது நேர்முக உதவியாளருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது கிரிவல பாதையிலிருந்து பூங்காவரை 100 மீட்டர் தூரம் சிமெண்ட் சாலை அமைத்து தர நகராட்சி செயற்பொறியாளர் நீலேஸ்வரனுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் பூங்கா பகுதியில் பறைவைகள் சரணாலயம் மற்றும் மலர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.


Tiruvannamalai Agnimurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!