திருவண்ணாமலையில் ரூ.149க்கு 1 கிலோ பிரியாணி வழங்கும் கடையில் எடை குறைவாக இருந்த காரணத்தால் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் புதூரில் வாட்டர் பால் என்ற பிரியாணி கடை கடந்த 5 மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டது. நடிகர் முரளியின் தம்பி டேனியல் கடையை திறந்து வைத்தார். திறப்பு விழா சலுகையாக ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. இதனால் இக்கடை பிரபலமானது.
தொடர்ந்து இக்கடையில் 1 கிலோ சிக்கன் பிரியாணி ரூ.149க்கு சலுகை விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று அந்த கடையில் பிரியாணி வாங்க கூட்டம் திரண்டது. ரூ.149க்கு 1 கிலோ பிரியாணி கவரில் வைத்து தரப்பட்டது. அப்போது சில வாடிக்கையாளர்கள் அந்த பிரியாணியை எடை போட்டு பார்த்தனர். அதில் 1 கிலோவுக்கு பதில் 964 கிராம் மட்டுமே இருந்ததாம். மேலும் ஒரே சிக்கன் பீஸ்தான் அதில் இருந்ததாம்.
இது குறித்து கேட்டதற்கு கடை நிர்வாகிகள் சரிவர பதில் சொல்லவில்லையாம். இதனால் பிரியாணியை வாங்க மறுத்து வாடிக்கையாளர்கள் அந்த கடையின் வாசலில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் அங்கு வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
இதையடுத்து அருண் என்பவர் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அவர் வாட்டர்பால் ரெஸ்டாரண்ட்டில் வாங்கப்பட்ட பிரியாணி எடை குறைவாக இருந்தது பற்றி கேட்டதற்கு தரக்குறைவாக பேசிய ஓட்டல் நிர்வாகத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மோசடி விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றும் உணவகத்தை இழுத்து மூட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் இது சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.