Homeஅரசு அறிவிப்புகள்பேகோபுரம் சிமெண்ட் சாலை பணி எப்போது முடியும்?

பேகோபுரம் சிமெண்ட் சாலை பணி எப்போது முடியும்?

திருவண்ணாமலை காந்தி சிலையிலிருந்து திருவூடல் தெரு வரையிலான சிமெண்ட் சாலை அமைக்கும் பணி 2 மாதத்தில் முடிவடையும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

திருவண்ணாமலை காந்தி நகர் நகராட்சி மைதானத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் நியமன ஆணைகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். (https://www.agnimurasu.com/2023/06/annamalaiyar-does-not-have-a-caste-does-the-village-temple-have.html)

பேகோபுரம் சிமெண்ட் சாலை பணி எப்போது முடியும்?

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கலெக்டர் பா.முருகேஷ் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பட்டியலிட்டார்.

அவர் பேசியதாவது,

ரூ.78 கோடியில் மாஸ்டர் பிளான்

திருவண்ணாமலை மாட வீதி சாலைகள், காங்கிரிட் சாலைகளாக மாற்றப்படுகிறது. முதல் கட்டமாக காந்தி சிலை முதல் திருவூடல் தெரு வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் ரூ.15 கோடி செலவில் சிமெண்ட் சாலை போடப்பட்டு வருகிறது. பணி முன்னேற்றம் சிறப்பாக உள்ளது. இரண்டு மாதத்துக்குள் அந்த ஒரு கிலோமீட்டர் சாலை பூர்த்தி செய்யப்படும்.

வட ஒத்தவாடை தெரு, தென் ஒத்தவாடை தெரு, கிழக்கு ராஜகோபுரம் அருகே உள்ள இரட்டை பிள்ளையார் கோயில் தெரு சாலைகள் ரூ. 1 கோடியே 64 லட்சம் செலவில் செப்பனிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல ரூ. 78 கோடியில் மாஸ்டர் பிளான் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த திட்டம் ஒன்றிரண்டு ஆண்டுகளில் முடிவடையும். இந்த திட்டம் நிறைவேறிய உடன் கிரிவல பாதை, அண்ணாமலையார் கோயில் பொலிவடையும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 328 திருக்கோயில்களின் திருப்பணி ரூ.109 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 154 கோயில்களின் குடமுழுக்கு வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.55 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ரூ.50 கோடி மதிப்பிலான அம்மணி அம்மன் கோபுர மடத்தை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு இந்து சமய அறநிலைத்துறைக்கு ஒப்படைத்துள்ளோம். இது ஒரு முக்கியமான நிகழ்வு.

கிரிவலப்பாதையை தூய்மை படுத்த 4 மிஷின்கள்

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக ஐயங்குளம் தூர்வாரப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடைந்து இந்த தீபத் திருவிழாவிற்கு தயாராகி விடும். கிரிவலப் பாதையை முழுவதும் தூய்மைப்படுத்துவதற்கான கருவிகள் நம்மிடம் இல்லை. துப்புரவு பணியாளர்கள் எவ்வளவுதான் சுத்தப்படுத்தினாலும் அது முழுமை அடையவில்லை. மக்கள் செருப்பு அணியாமல் வெறும் காலில் நடக்கின்றனர்.

பேகோபுரம் சிமெண்ட் சாலை பணி எப்போது முடியும்?
                            தூய்மை பணி வாகனத்தின் செயல்பாடு குறித்து கலெக்டருக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது(பைல் படம்)

இதை கருத்தில் கொண்டு சென்னை, வேலூர் போன்ற மாநகராட்சியில் உள்ளது போன்ற மிஷின் வாங்கப்படுகிறது. ஒரு மிஷின் 10 நாளில் நமது மாவட்டத்திற்கு வந்து விடும். நடைபாதையையும் சுத்தம் செய்ய மூன்று மிஷின்கள் வருகிறது. ஒரு மிஷின் வந்து அறநிலையத்துறை வசனமும், மற்ற இரண்டு மிஷின்கள் நெடுஞ்சாலை துறை வசமும் ஒப்படைக்கப்படும். இந்த மிஷின்களை கொண்டு கிரிவலப்பாதை மற்றும் நடைபாதைகளை சுத்தப்படுத்திவிட முடியும். தற்போது கிரிவலப் பாதையில் இன்னொரு பகுதியில் நடை பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடியும் போது கிரிவலப் பாதை அழகாகவும், சுத்தமாகவும் காட்சியளிக்கும்.

கிரிவலம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சனி, ஞாயிறு மட்டுமின்றி மற்ற நாட்களிலும் கூட்டம் அதிக அளவில் வருகிறது. இதன் காரணமாக சாலைகளை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். கோயில் அருகே தள்ளுவண்டிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கடைகளை அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


 Tiruvannamalai Agnimurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!