திருவண்ணாமலையில் சிவா எலக்ட்ரானிக்ஸ் கடையில் உள்ள சுப்ரீம் மொபைல் கடையில் இன்று ரூ.6000 மதிப்புள்ள வாட்ச், ரூ.1000த்துக்கு வழங்கப்பட்டது. இதை வாங்க கூட்டம் அலைமோதியது.
மாலைக்கு பிறகு ஸ்டாக் தீர்ந்து விட்டதால் வாட்ச் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கூப்பன் பெற்றவர்களுக்கு புதன்கிழமை அன்று வாட்ச் வழங்கப்படும் என கடை உரிமையாளர் விமல்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சுப்ரீம் மொபைல் கம்பெனி 26 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் திருவண்ணாமலையில் சிவா எலக்ட்ரானிக்ஸ் உடன் இணைந்து புதிய கிளையை துவக்கி உள்ளது. இந்த கிளை போளுர் ரோடு அறிவொளி பூங்கா அருகில் உள்ள சிவா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் அனைத்து முன்னணி கம்பெனிகளின் மொபைல்கள், லேப்டாப்கள், டிவி மொபைலுக்கு தேவையான உதிரி பாகங்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுப்ரீம் மொபைல் துவக்க விழாவை யொட்டி ஸ்மார்ட் போன் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தங்க நாணயம், லஞ்ச் பேக், ஸ்மார்ட் வாட்ச், ஹோம் தியேட்டர், கேமரா மொபைல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடிக் கடன் அனுமதி வாங்கி தரப்பட்டது.
இதோடு மட்டுமன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் சுப்ரீம் மொபைல் திறப்பு விழா இமேஜை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்து அதை 100க்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருந்தால் அவர்களுக்கு ரூ.6000 மதிப்புள்ள ரியல் மீ டிசோ ஸ்மார்ட் வாட்ச் ரூ.1000 த்துக்கு தரப்படும் என அந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் தங்களது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் இந்த இமேஜை வைத்து 100 பார்வையாளர்களை கடந்திருந்தனர். அவர்கள் இன்று காலை முதல் அந்தக் கடைக்கு வர தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டு ரூ.1000 பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு டிசோ வாட்ச் வழங்கப்பட்டது. நேரமாக நேரமாக கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
இதனால் கடையில் இருப்பில் இருந்த 800 வாட்ச்களும் விற்று தீர்ந்தது. மேலும் 2000 த்துக்கும் மேற்பட்டோர் வாட்சைப் பெற வந்ததால் அவர்களை சமாளிக்க கடைக்காரர்களால் முடியவில்லை. இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நகர காவல்துறையினர் வந்து கூட்டத்தை கலைந்து போக செய்தனர்.
இது குறித்து சிவா எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் விமல்குமாரிடம் கேட்ட போது ஸ்மார்ட் வாட்ச் வாங்குவதற்கு இவ்வளவு கூட்டம் வரும் என எதிர்பார்க்கவில்லை. இன்று ஒரு நாள் 800 பேருக்கு வாட்ச் வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் பேருக்கு மேல் கூப்பன் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கிளையில் வாட்ச் இருப்பு இல்லாததால் மற்ற ஊர்களில் உள்ள சுப்ரீம் மொபைல் ஷோரூம்களில் இருந்து வாட்ச் வரவழைக்கப்பட்டு கூப்பன் உள்ளவர்களுக்கு புதன்கிழமை அன்று வாட்ச் வழங்கப்படும் என தெரிவித்தார்.