திருவண்ணாமலையில் தமிழ்நாடு ஓட்டலில் தலை வாழை இலை இன்றி உணவு பறிமாறப்பட்டதை பார்த்த அமைச்சர், அதிகாரிகளை எச்சரித்தார்.
ஜவ்வாதுமலையில் நாளை நடைபெற உள்ள கோடை விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன், இன்று திருவண்ணாமலைக்கு வந்தார். ஈசான்ய லிங்கம் அருகில் உள்ள சுற்றுலா துறையின் ஆலயம் தங்கும் விடுதியிலும், போளுர் ரோட்டில் உள்ள தமிழ்நாடு ஓட்டலிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆலயம் தங்கும் விடுதியில் உள்ள அறைகளை அவர் பார்வையிட்டார். அப்போது பல அறைகளில் ஏ.சி இல்லாததை பார்த்து அனைத்து அறைகளிலும் ஏசி போட உத்தரவிட்டார். வாடிக்கையாளர் ஏசி வேண்டாம் என கேட்டால் ஆப் செய்து விடுங்கள் என கூறினார். ஒரு அறையில் கழிவறை மற்றும் பெட் ஷீட்டில் கரை இருப்பதை பார்த்து இப்படியெல்லாம் இருக்கக் கூடாது, சுத்தமாக இருக்க வேண்டும். அறை பளீச் சென்று இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பிறகு தமிழ்நாடு உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ராமச்சந்திரன், உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தவரிடம் சாப்பாடு எவ்வாறு உள்ளது? என கேட்டறிந்தார். அங்கு உணவருந்தி கொண்டிருந்தவர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறததை பார்த்து அமைச்சர் கோபம் அடைந்தார்.
ஏன் வாழை இலையில் உணவு பரிமாறவில்லை? பைத்தியக்காரத்தனமா செய்கிறீர்களா? வாழை இலையில் சாப்பிட்டு செல்வதை மக்கள் விரும்புகிறார்கள். இரண்டு மாதமாக தலை வாழை இலை போட்டு பரிமாற சொல்லுகிறோம். ஏன் செய்யவில்லை? இன்னொரு தடவை இலையில்லாமல் உணவு பரிமாறுவதை பார்த்தால் அவ்வளவுதான் என சுற்றுலாத் துறை அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கினார்.
தமிழ்நாடு ஓட்டலில் இன்னும் அதிக அளவு போர்டு வைக்குமாறும், பப்ளிசிட்டி செய்தால்தான் ஆட்கள் அதிக அளவில் வருவார்கள். தமிழ்நாடு ஓட்டல் அவ்வளவு நன்றாக உள்ளது என இங்கு வருபவர்கள் சொல்லும் அளவிற்கு பெயர் எடுக்க வேண்டும். உணவகத்தில் சர்வீஸ் குறைபாடை சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
பிறகு அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆலயத்தில் 132 அறைகளும், தமிழ்நாடு ஓட்டலில் 9 அறைகளும் உள்ளன. அனைத்தையும் நீட்டாக வைத்திருக்க உத்தரவிட்டிருக்கிறேன். அறைகளில் டிவி போட சொல்லி சொல்லி இருக்கிறோம். அதே போல் அனைத்து அறைகளிலும் ஏசி இருக்க வேண்டும் எனவும், புது பெட்ஷீட் போட வேண்டும், கம்பளி மாதிரி உள்ள பெட்ஷீட் பயன்படுத்தக் கூடாது எனவும் சொல்லி இருக்கிறோம். சமையல் இன்னும் நன்றாக செய்து தர சொல்லி இருக்கிறோம். ஜவ்வாது மலையில் 20 ஏக்கரில் சாகச பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
முன்னதாக அமைச்சர் ராமச்சந்திரனை, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சந்தித்து விட்டு சென்றார். மற்றபடி உள்ளூர் திமுக பிரமுகர்கள் யாரும் அமைச்சர் ராமச்சந்திரனோடு வர ஆர்வம் காட்டாததால் அவர் தனியாக வந்து, தனியாகவே புறப்பட்டு சென்றார்.