மகளிர் உரிமை தொகை திட்டம், சென்சிட்டிவான திட்டம். ஏதாவது என்றால் எதிர்கட்சிகள் வீடியோ எடுத்து விடுவார்கள் என அதிகாரிகளை உதயநிதி ஸ்டாலின் எச்சரித்தார்.
திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளுர் ஆகிய தொகுதிகளில் நேற்று நடைபெற்ற கட்சி மற்றும் அரசு விழாக்களில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
86 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
நேற்று காலையில் ஜவ்வாதுமலையில் நடைபெற்ற 23வது கோடை விழாவை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். 86 ஆயிரத்து 708 பயனாளிகளுக்கு ரூ.241 கோடியே 54 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ரூ.144 கோடியே 87 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 583 பணிகளையும் திறந்து வைத்தும், ரூ.164 கோடியே 27 லட்சம் மதிப்பிலான புதியதாக அமைய உள்ள 380 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரையாற்றினார்.
மக்களை கவர்ந்த ஜல்லிகட்டு காளை
பிறகு போளுரில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மாலையில் திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய மைதானம் அருகில், அண்ணா நுழைவு வாயில் எதிரில் புதிதாக ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா மற்றும் ஜல்லிகட்டு காளை சிலையையும் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ஏராளமானோர் இந்த ஜல்லிகட்டு காளையை பார்வையிட்டு சென்றனர். செல்பியும் எடுத்துக் கொண்டனர்.
அதன்பிறகு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் அரசு பல்துறை சார்ந்த வளர்ச்சித் திட்டபணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில், உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
உணவில் பல்லி-2 பேர் சஸ்பெண்ட்
அப்போது நாளிதழ்களில் வந்த செய்திகளை மேற்கோள் காட்டி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் பன்னியாண்டி இன மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இனி நடைபெறாமல் தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தண்டரையில் பல்லி விழந்த உணவை உண்டு மாணவ-மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேட்டார். இதற்கு பதில் அளித்த சத்துணவு துறை அலுவலர், சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகிய 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
பவுர்ணமி அன்று கிரிவலம் முடிந்து ஊர் திரும்புவதற்கு பஸ் கிடைக்காமல் பக்தர்கள் சாலை மறியல் நடத்தியது குறித்து கேட்டதற்கு பவுர்ணமி தினங்களில் கூடுதலாக பஸ்களை வரவழைக்க உள்ளோம். எனவே இனி இது போன்று நடக்காது என போக்குவரத்து துறை சார்பில் பதிலளிக்கப்பட்டது.
ஆய்வின் முடிவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,
கல்வியில் பின்னடைவு
மக்கள் வழங்கும் ஒவ்வொரு மனுவும் வெறும் காகிதம் அல்ல, அது அவர்களுடைய வாழ்க்கையின் எண்ணம் என முதல்வர் சொல்வார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல திட்டங்கள் சிறப்பாக இருந்தாலும் சில திட்டங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையில் இம்மாவட்டத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டும். நான் அனைத்து மாவட்டங்களும் சென்று ஆய்வு நடத்துவது போல் முதலமைச்சரும் ஆய்வு நடத்தி வருகிறார்.
அப்போது சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறார். தொய்வு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முதல்வர் வர உள்ளார்
இன்றைய ஆய்வின் போது பல பணிகளுக்கு நீங்கள் டெட்லைன் (காலக்கெடு) கொடுத்து இருக்கிறீர்கள். அந்த டெட்லைனுக்குள் திட்டங்களை முடிக்க வேண்டும். இந்த ஆய்வின் ரிப்போர்ட் நாளை முதலமைச்சர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். விரைவில் முதல்வர் மாவட்டத்திற்கு வருகை தந்து கள ஆய்வில் ஈடுபடுவார்.
சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு அவர்கள் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் கட்டணமில்லா பேருந்து, புதுமைப் பெண் போன்ற பல திட்டங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
மகளிர் உரிமை தொகை திட்டம்- சர்ச்சை கூடாது
திராவிட மாடல் என்றால் எல்லோருக்கும் எல்லாம் போய் சென்று அடைய வேண்டும் என முதல்வர் கூறுவார். அந்த வரிசையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு இந்த ஆண்டு ஏழாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றுகையில் எந்த சர்ச்சையும் ஏற்படாமல், தகுதியுள்ள ஒருவரையும் விட்டுவிடாமல், பயனாளிகள் எவரையும் மரியாதை குறைவாக நடத்தி விடாமல் இருக்க வேண்டும்.
ஏனென்றால் இது மிகவும் சென்சிட்டிவ்வான திட்டம். இதை எதிர்க்கட்சிகள் வீடியோ எடுத்து இதில் என்னென்ன எதிர்மறையாக பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பார்ப்பார்கள். நீங்கள் அதற்கு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது. மிகச் சிறப்பாக திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு, எதிர்பார்ப்பு உள்ளது. எனவே இதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
முதல்வர் எந்த திட்டத்திலும் தீட்டினாலும் அதை மக்களிடம் சென்று சேர்ப்பது நீங்கள் தான். அந்த திட்டம் கடை கோடி மக்களிடம் போய் சேர வேண்டும் என்றால் அரசு அதிகாரிகளாகிய உங்களுடைய ஒத்துழைப்பு கண்டிப்பாக எங்களுக்கு தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சிறப்பு திட்ட செயலாகத் துறை செயலாளர் டேரேஸ் அகமது, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், மாவட்ட வன அலுவலர் அருண்லால், கூடுதல் ஆட்சியர் ரிஷப், சார் ஆட்சியர் அனாமிகா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை), எம்.கே.விஷ்ணு பிரசாத் (ஆரணி) சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி) பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), ஒ.ஜோதி (செய்யாறு), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.