திருவண்ணாமலையில் மது, மாது கிடைக்கும் இடமாக விளங்கிய லாட்ஜ்க்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் மொத்த அறைகளுக்கும் பூட்டு போடப்பட்டது.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் பல்வேறு தங்கும் விடுதிகள் உள்ளன. இதில் சில லாட்ஜ்களில் விபச்சாரம் நடைபெறுவது வழக்கமாகி உள்ளது. குறிப்பாக நகராட்சிக்கு சொந்தமான தங்கும் விடுதி, விபச்சாரத்தை மட்டுமே பிரதானமாக கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இங்கு போலீசார் ரெய்டு சென்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் எதிரில் எஸ்.ஏ.எஸ்.ஏ என்ற லாட்ஜ் உள்ளது. இதை உரிமையாளர் குத்தகைக்கு விட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு விபச்சாரம் நடைபெற்றது போலீசார் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இங்கு மதுவும் கிடைத்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அந்த லாட்ஜ் மேலாளர் ராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் உரிமம் இன்றி அந்த லாட்ஜ் இயங்கி வந்ததாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து சமூக விரோத செயல்கள் நடைபெற்றதால் அந்த லாட்ஜ்ஜை தாசில்தார் சரளா, இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில் வருவாய்த்துறையினரும், போலீசாரும் பூட்டி சீல் வைத்தனர். முன்னதாக 21 அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை லாட்ஜ்களில் விபச்சாரம் நடத்தி வருபவர்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.