சாத்தனூர் அணையிலிருந்து திருவண்ணாமலைக்கு வரும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக 12 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதன் காரணமாக திருவண்ணாமலையில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆறிலிருந்து தண்ணீர் சுத்திகரிப்பட்டு திருவண்ணாமலைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக சாத்தனூர் அணை அருகில் உலகலாப்பாடி பிக் அப் அணைக்கட்டிலிருந்து 24 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருவண்ணாமலைக்கு குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. உலகலாப்பாடியிலிருந்து கீழ்கண்ட பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு பைப் லைன் மூலம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.
18 ஆயிரத்து 994 குடியிருப்புகளுக்கு குடிநீர்
1. சோமவாரக் குளம் 3 லட்சம் லிட்டர்
2. சோமவாரக் குளம் 6.75 லட்சம் லிட்டர்
3. சோமவாரக் குளம் 4.50 லட்சம் லிட்டர்
4. வ.உ.சி. நகர் 6.75 லட்சம் லிட்டர்
5. பேகோபுரம் 10 லட்சம் லிட்டர்
6. புதிய பஸ் நிலையம் 10 லட்சம் லிட்டர்
7. பழைய பஸ் நிலையம் 18 லட்சம் லிட்டர்
8. பூமாந்தா குளம் 8 லட்சம் லிட்டர்
9. தாமரை நகர் 1.50 லட்சம் லிட்டர்
10. திருக்கோவிலூர் ரோடு 2 லட்சம் லிட்டர்
11. தேனிமலை 4.20 லட்சம் லிட்டர்
12. பச்சையம்மன் கோவில் 5 லட்சம் லிட்டர்
13. அண்ணா நகர் 6.50 லட்சம் லிட்டர்
14. அண்ணா நகர் 1.50 லட்சம் லிட்டர்
ஆகிய தலைமை நீரேற்று நிலையங்களில் மொத்தம் 90 லட்சம் லிட்டர் குடிநீர் நிரப்பப்படுகிறது. இங்கிருந்து 18 ஆயிரத்து 994 குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
கசிவு மற்றும் சுத்திகரிக்கும் போது வீணாகும் நீர் போக 17.50 எம்.எல்.டி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நபர் ஒருவருக்கு 120 எல்.பி.சி.டி வீதம் என 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை-அரூர் சாலை விரிவாக்கத்தின் காரணமாக பிரதான குடிநீர் பைப்புகள் சேதம் அடைந்தன. இதே போல் திருவண்ணாமலையில் சாலை பணிகளின் போதும் குடிநீர் பைப் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்து விடுகிறது. இதை நகராட்சி அலுவலர்கள் உடனுக்குடன் சரி செய்து வருகின்றனர்.
12 அடி உயரத்திற்கு எழும்பிய தண்ணீர்
இதற்கிடையில் நேற்று இரவு தண்டராம்பட்டு போலீஸ் நிலையம் அருகில் பிரதான பைப் திடீரென உடைந்து தண்ணீர் 12 அடி உயரத்திற்கு மேலே எழும்பி பீய்ச்சி அடித்தது. இதை காண சுற்றுப்பகுதி மக்கள் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயரே எழும்பி அருவி போல் கொட்டிய தண்ணீரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். ஏராளமான தண்ணீர் ரோட்டில் ஓடி வீணானது.
தகவல் கிடைத்ததும் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடைந்த பைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இன்று இரவு வரை இப்பணி தொடர்ந்து. இதன் காரணமாக திருவண்ணாமலையில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. நாளை இப்பணி முடிக்கப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Watch “குடிநீர் குழாய் உடைந்து 12 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த டேம் தண்ணீர்.” on YouTube
செய்தி-கட்டுரைகளை [email protected] – என்ற இமெயிலில் அனுப்பலாம்.