திருவண்ணாமலையில் 200 குடியிருப்புகளை கட்டுவதற்காக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள 90 சென்ட் இடத்தை நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் மீட்டு கையகப்படுத்தியது.
நகர்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை கீழ்அணைக்கரை ஊராட்சியில் தேனிமலை அருகில் இதே போன்று குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை வேட்டவலம் ரோட்டில் ரிங் ரோட்டுக்கு அருகில் ஏந்தல் ஊராட்சியில் 90 சென்ட் இடம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்திற்கு கடந்த 2010ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக அந்த இடம் 5 நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.
அந்த இடத்தில் ஓட்டல் கடை, மரப்பட்டறை உள்பட 7 கடைகளும், வீடும் கட்டப்பட்டு இருந்தது. இந்த இடத்தை ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ், ஆக்கிரமிப்புகளை அகற்றி இடத்தை கையகப்படுத்தும்படி நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து இன்று தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் குமாரததுரை மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டது. சிலர் கடைகளிருந்த ஷட்டர், தகர ஷீட்டுகளை அவர்களாவே பிரித்துக் கொண்டு சென்றனர்.
இதன் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஆளும்கட்சி, எதிர்கட்சி என்று பாரபட்சம் காட்டாமல் நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை துணையோடு மீட்டு கையகப்படுத்தியுள்ளனர். 5 சென்ட் இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு போக மீதம் உள்ள 85 சென்ட் இடத்தில் 200 குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
[email protected] -ல் செய்தி, கட்டுரைகளை அனுப்பலாம்.