திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர விழாவில் குலாலர் வம்சத்தினர் மட்டுமே தீ மிதிக்கும் உரிமையை பெற்றவர்களாக உள்ளனர். அவர்கள் இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள்.
ஆடி ஆவணி புரட்டாசி என தை மாதம் பொங்கல் வரை திருவிழாக்களை துவக்கி வைக்கிற மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. ஆடி மாதம் தட்சாயண புண்ணிய காலத்தின் தொடக்கமாகும். வடக்கு நோக்கி நகரும் சூரியன் தெற்கு நோக்கி பயணம் செய்வார்.
உலக மக்களை காக்கும் அம்மன்
இதில் ஆடிப்பூரம் விசேஷமானதாகும். உலகத்தை காத்து ரட்சிக்கிற அம்பிகையின் அவதாரங்களில் ஒன்றான உமாதேவியின் அவதார நாளான ஆடிப்பூரத்தில் அம்பாள் கோயில்களில் வளைகாப்பு நடைபெறும். தாய்மை அடைந்த பெண்ணை மகிழ்விக்கும் வளைகாப்பு போல உலக மக்களை காக்கும் அம்மனுக்கு பக்தர்கள் வளையல் அணிவித்து மகிழ்வர்.
நள்ளிரவு தீ மிதி விழா நடைபெற்றது. சிவன் கோயில்களில் திருவண்ணாமலையில் மட்டுமே தீ மிதி விழா நடைபெறுவது சிறப்பானதாகும். குலாலர் வம்சத்தினர் (உடையார்) மட்டுமே தீ குண்டத்தில் இறங்கும் உரிமையை பெற்றவர்கள் ஆவர்.
இதற்கு ஒரு புராண கதை உண்டு.
குலாலர் இனத்தவர் தட்சன். இவரது மகளான தாட்சாயினி சிவபெருமான் மீது காதல் கொண்டார். சிவபெருமானை நினைத்து தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக சிவபெருமானுடன் திருமணம் நடந்தது.
ருத்திர அவதாரம்
தட்சன் கைலாயம் சென்றபோது, சிவபெருமான் எழுந்துநின்ற வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன் மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல், மற்ற அனைத்து தேவர்களையும், இறைவன்களையும் தட்சன் அழைத்தார்.
இதனை அறிந்த தாட்சாயினி தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன் தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட தாட்சாயினி சென்றாள். அங்கு அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள்.
இதனால் சிவபெருமான் ருத்திரனாக அவதாரம் எடுத்து தட்சனை அழித்தார் என்பது வரலாறு.
ஆடிப்பூர பத்திரிகை
திருவண்ணாமலை, கொட்டகுளம், பெரிய கோலாப்பாடி, மலமஞ்சனூர் புதூர், திருவடத்தனூர், கலர்பாளையம், தண்டராம்பட்டு, ஜம்பை, மூங்கில் துறைப்பட்டு, சேலம் உள்பட 25 கிராமங்களில் உள்ள குலாலர்(உடையார்) இனத்தவர்களுக்கு அண்ணாமலையார் கோயில் சார்பில் ஆடிப்பூர பத்திரிகை வழங்கப்படும்.
இதையடுத்து ஆடிப்பூரத்திற்கு முன்னதாக கிருத்திகையில் அக்னி குண்டத்தில் இறங்குபவர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்குவார்கள். 10 நாடகள் விரதத்தை மேற்கொள்வர். தீ மிதி நிகழ்ச்சி அன்று இரவு அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடிய பிறகு குலாலர் வம்சத்தினருக்கு கோயில் சார்பில் பரிவட்டம் கட்டப்படும்.
ஆடிப்பூர தீ மிதி விழா அன்றோ அதற்கு மறுநாளோ மழை பெய்வது வழக்கமாக உள்ளது என்பதும், இந்த ஆண்டு பூர நட்சத்திரம் முன்னதாகவே வந்ததால் 11 ஆண்டுகளுக்கு பிறகு கொடியேற்று நாளிலேயே வளைகாப்பு, தீ மிதி விழா நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
படங்கள்-மணிமாறன்