திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு கட்டணத்திற்கு ரூ.500 வசூலிக்கப்பட்டது குறித்து அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டதற்கு திருப்பதியில் ரூ.3000 கொடுத்து டிக்கெட் வாங்குகிறீங்க, இங்கு பக்தர்கள் விருப்பப்பட்டு நன்கொடை கொடுப்பதற்கு உள்நோக்கம் கற்பிக்க கூடாது என காட்டமாக பதிலளித்தார்.
பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி விளங்குகிறது. தலமாக இங்கு மலையே சிவனாக வணங்கப்படுவதால், தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு சென்றும், கிரிவலம் சென்றும் வழிபட்டு வருகின்றனர்.
பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்திலிருந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினங்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழகைளில் கூட்டம் அலைமோதி வருகிறது. பெரும்பாலான ஆந்திரா, தெலுங்கானா பக்தர்கள் கார், வேன், பஸ்களில் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். இந்த வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால் அவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
தற்போது கோயிலில் தர்ம தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனமும் நடைமுறையில் உள்ளது. பவுர்ணமி நாட்களில் மட்டும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்கு நீண்ட நேரம் ஆவதாலும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும் பக்தர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நீண்ட நேரம் வரிசையில் நிற்கிறோம், சாமி தரிசனம் செய்யமுடியவில்லை என பக்தர்கள் தரப்பிலிருந்து தனக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக போன்கால்கள் வருவதாக தெரிவித்தார். எனவே வரிசையின் நீளத்தை அதிகரித்து தரிசனத்திற்கு காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் படியும் கோயில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
ஆனாலும் அமர்வு தரிசனத்துக்காக அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், விவிஐபி குடும்பத்தினர் வைகுண்டவாயில் வழியாக அடிக்கடி அழைத்து செல்லப்படுவதால், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இது பற்றி புகார் வரவே விடுமுறை நாட்களில் அமர்வு தரிசனத்தை ரத்து செய்யும்படி அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார். அதன்படி கடந்த 2 வாரங்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் எப்போதும் இல்லாதவாறு சிறப்பு தரிசனம் என்ற பெயரில் ஒரு நபருக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வைகுண்ட வாயில் வழியாக அர்த்த மண்டபத்துக்கு வெளியே க்யூவில் இணைத்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். திருப்பதியிலேயே டிக்கெட்டுக்கு ரூ.300 வசூலிக்கப்படும் போது வசதி குறைவான அண்ணாமலையார் கோயிலில் ரூ.500 வசூலிக்கப்படுவது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுபற்றி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்தி வெளியாகவே மேலதிகாரிகளின் உத்தரவினால் ரூ.500 வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் கோயிலில் ரூ.500 வசூலிக்கப்பட்டது குறித்து திருவண்ணாமலையில் கலைஞர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்களை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு,
அண்ணாமலையார் கோவிலில் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என துறையின் சார்பில் எந்தவிதமான ஆணையும் வழங்கப்படவில்லை. பொதுவாக வருகிற ஆன்மீக மக்கள் நன்கொடை தர வேண்டும், ரசீது கொடுங்கள் என்று கேட்கும் போது தான் 500 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
இது பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்துடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு முறையாக பத்திரிகையில் அறிவித்த பிறகு செய்வோம் என சொன்னவுடன் அது நிறுத்தப்பட்டு விட்டது.
இதுபற்றி நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். இங்கிருந்து திருப்பதிக்கு போறீங்க, திருப்பதிக்கு போய் 3000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க மனசு இருக்குது, 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க மனசு இருக்குது. அத யாரும் பாசிட்டிவா திங் பண்ண மாட்றீங்களே? திருவண்ணாமலை திருக்கோயிலில் ஆன்மீக மக்கள் மூலமாக, இஷ்டப்பட்டு பணம் கொடுப்பவர்கள் மூலமாக இந்த ஊரின் வளர்ச்சியை கொண்டு வர முடியாதா? இந்த திருக்கோயிலை இன்னும் வளர்ச்சி அடைய வைக்க முடியாதா? பக்தர்கள் அவர்களாகவே பணம் கொடுப்பதை வேண்டாம் என்று உள்நோக்கத்துடன் அரசாங்கத்தோடு சம்மந்தப்படுத்தி பேசுவது என்பது தவறு
இவ்வாறு அவர் கூறினார்.