திருவண்ணாமலை அடுத்த பழையனூரில் 1000 அடி உயரத்தில் அமைந்துள்ள மன்னர் கால கோட்டை உச்சியில் அமைந்திருக்கும் முருகர் கோயிலுக்கு ஊரே சென்று வழிபடும் விசேஷ நிகழ்வு ஆடிக்கிருத்திகை அன்று நடந்து வருகிறது. மலை மீது செல்வதற்காக 800 படிகள் ஊர் மக்கள் சார்பில் அமைத்து தரப்பட்டுள்ளது.
எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றவும், எதிரி நாட்டு வீரர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அரசர்கள் தங்கி இளைப்பாறவும், சிறை பிடிக்கப்பட்ட வீரர்களை அடைத்து வைக்கவும் மன்னர் காலத்தில் கோட்டைகள் கட்டப்பட்டன.
சிதிலடைந்த கோட்டை
அகழிகளால் சூழப்பட்ட கோட்டைகள்(வேலூர், செஞ்சி போன்று), மலை மீது கட்டப்பட்ட கோட்டைகள், அடர்ந்த காட்டுக்குள் கட்டப்பட்ட கோட்டைகள் என மன்னர் கால கோட்டைகளை வகைப்படுத்தலாம். இதில் பல மலைகோட்டைகள் சிதிலடைந்து காணப்படுகின்றன. பழையனூர் கோட்டையும் அந்த வகையை சார்ந்ததுதான்.
திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை செல்லும் சாலையில் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பழையனூர் கிராமம். இங்குள்ள மலை மீது தான் கோட்டை அமைந்திருக்கிறது. தரையிலிருந்து சுமார் 1000 அடி உயரத்தில் இந்த கோட்டை உள்ளது. செஞ்சி கோட்டையோடு சம்மந்தப்பட்டதாக கூறப்படும் இக்கோட்டை கண்காணிப்பு கோட்டையாக விளங்கியிருக்கிறது. அடுத்த தலைமுறையினர் பார்க்க முடியுமா? என்ற நிலையில் இக்கோட்டை சிதிலமடைந்திருக்கிறது. தியாகதுருகம், பழையனூர், துர்கம் போன்ற கோட்டைகள் ஒரே பாணியில் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகர், வீரஆஞ்சநேயர்
பழையனூர் கோட்டை, அங்கிருக்கும் பாறைகளை துளையிட்டு குடைந்து கட்டப்பட்டிருக்கிறது. பாறைகளுக்கு அடியில் நீர் ஓடி தானாகவே அமைந்த சுனையைச் சுற்றிலும் விழுதுகள் இல்லா மரம் என சொல்லக் கூடிய கல்லால மரம் சூழ்ந்திருக்கிறது. எதிரிகள் வந்தால் தாக்க கோட்டையின் வாயில் குறுகலாக அமைந்திருக்கிறது. சுற்றிலும் விநாயகர், வீரஆஞ்சநேயர், யானை மீது செல்லும் வீரரை சிங்கம் தாக்குவது போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. வீரர்கள் தங்க கூடிய மண்டபம் ஒன்றும் உள்ளது.
3அடி அகலம், 7அடி உயரம் கொண்ட கிணறு போல் அமைப்பு கொண்ட இயற்கையாக அமைந்த சுனை உள்ளது. இறங்கி செல்ல படிக்கட்டுகளும், தண்ணீர் நிரம்பினால் வெளியேற துளையும் காணப்படுகிறது. இது மட்டுமன்றி 3 அறைகள் இடிந்து தற்போது பக்கவாட்டு சுவர்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இதில் தண்ணீர் தேங்கி சுனையாக காட்சியளிக்கிறது. வீரர்கள், மன்னர் குடும்பத்தினர் தங்கவும், நீராடவும் இந்த அறைகள் கட்டியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
சுண்ணாம்பு அரைக்கவும், பச்சிளை மருந்து அரைக்கவும் பாறையில் அமைக்கப்பட்ட உறல் உள்ளது. 20அடியிலிருந்து 30அடி உயர கோட்டை சுவர் பல இடங்களில் இடிந்து காணப்படுகிறது.
உச்சியில் கோட்டை மலை முருகன் கோயில் அமைந்திருக்கிறது. ஆடிக்கிருத்திகை அன்று இந்த மலையே மனிதர்கள் தலையாக காட்சியளிக்கும். மலை கோட்டை முருகனை வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பழையனூர் கிராமத்தில் ஆடிக்கிருத்திகை அன்று முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும், நாக்கில் வேல் குத்தியும், காவடி எடுத்தும், நெருப்பு மிதித்தும் பழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களும், சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த பக்தர்களும் விரதம் இருந்து நேர்த்திக் கடனை செலுத்துவர். பிறகு உற்சவ பெருமானோடு மலை மீது ஏறி முருகப்பெருமானை வழிபடுவார்கள்.
800 படிக்கட்டுகள் அமைப்பு
இதன் பிறகு 2 நாட்கள் கழித்து கோட்டையின் காவல் தெய்வமாக விளங்கும் இடும்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோட்டை மீது செல்ல முருகப் பக்தர்கள் சார்பாக பல லட்சம் ரூபாய் செலவில் 800 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இறைவழிபாட்டு ஆலயங்கள் நமது பண்பாட்டின் முக்கியச் சின்னங்களாக விளங்குகின்றன. கோட்டைகள், அரண்மனைகள் ஆகியவையும் நமது பண்பாட்டின் முக்கியச் சின்னங்களாகும். அந்த வகையில் பழையனூர் கோட்டையும் அமைந்திருக்கிறது. சிதிலமடைந்து வரும் இக்கோட்டையை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.
இந்த மாதம் 9ந் தேதி(புதன்கிழமை) ஆடிக்கிருத்திகையாகும். மலைக் குகைகளிலும், ஏராளமானோர் மனக் குகைகளிலும் வாழும் முருகப் பெருமான் காதல், வீரம், ஞானம் ஆகிய மூன்றுக்கும் அதிபதியாகப் போற்றப்படுபவர். நாமும் பழையனூர் முருகப் பெருமானை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.
படங்கள்- பார்த்திபன்