திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தொடர்ந்து சென்று வரும் உள்ளூர் பக்தர்களுக்கு பாஸ் வழங்கவும், கோயிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் எனவும் அறங்காவலர் குழுவிற்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறிமுக விழா துளவ வேளாளர் திருமண மண்டபத்தில் நேற்று (8ந் தேதி) இரவு நடைபெற்றது.
இதில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அறங்காவலர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.
அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலைக்கு பல நாடுகளில் இருந்து, பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் வருவது நமது ஊருக்கு நல்லது தான். ஆந்திராவில் இருந்து வருகிறார்கள் என்றால் ஹோட்டலில் தங்கி தானே ஆக வேண்டும்? ஹோட்டலில் சாப்பிட்டு தானே ஆக வேண்டும்? பொருள் வாங்கத்தானே வேண்டும்? இவைகள் எல்லாம் செய்கிற போது நமது ஊரின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. தனிமனித பொருளாதாரம் இந்த ஊரில் வளர்கிறது.
இன்றைக்கு திருவண்ணாமலை திருவூடல் வீதியில் நடக்க முடிகிறதா? பெரிய தெருவில் பவனி வர முடிகிறதா? அன்பு தியேட்டர் எதிரில் நீண்ட சாலை இருந்ததே? அது அப்படி இருக்கிறதா? அண்ணாமலையார் கோயில் மேல் இருக்கிற ஆன்மீக பற்றின் காரணமாக கூட்டம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அப்படி வருபவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்ய வேண்டிய கடமை அரசுக்கும், இந்துசமய அறநிலைதுறைக்கும் உள்ளது. அரசு வசதிகளை செய்யவில்லையென்றால் அவர்கள் எப்படி வருவார்கள்? கார் நிறுத்தத்திற்கு வசதி ஏற்படுத்தி கொடுங்கள் என்ன சொன்னார்கள்.
உள்ளூர் பக்தர்களுக்கு நிரந்தர பாஸ்
கோயிலுக்கு தினமும் செல்ல பக்தர்களுக்கு வழிவகை காண வேண்டும் என ஒருவர் மனு கொடுத்திருந்தார். அதற்கு முன்னாடியே நானும், மாவட்ட ஆட்சித் தலைவரும், இணை ஆணையரும் உட்கார்ந்து பேசி பட்டியல் ஒன்று தயார் செய்து தொடர்ந்து நம் திருக்கோவிலுக்கு யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களுக்கு நிரந்தரமாக பாஸ் கொடுக்க சொல்லி இருக்கிறேன். அதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. அதற்குள் பீதியை கிளப்பி கொண்டிருக்கிறார்கள்.
அறங்காவலர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது
ஆன்மீகப் பணியாற்றிக் கொண்டிருக்கிற 50 ஐயர் குடும்பங்கள் கோயிலுக்கு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்று சொன்னார்கள். அவர்களை அழைத்துப் பேசி அவர்கள் வருத்தப்படாத அளவிற்கு பணியை செய்ய வேண்டும் என அறங்காவலர்களுக்கு சொல்லியிருக்கிறேன். நல்லதுக்கு மட்டும்தான் வருவனே தவிர மீதிக்கெல்லாம் நான் வரமாட்டேன். அறங்காவலர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. எதை செய்தாலும் அமைச்சர் தான் சொன்னார் என்று சொன்னால் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். ஏனென்றால் என்னைக்காவது ஒருநாள் இதெல்லாம் நான் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருப்பேன்.
உள்ளூர்காரர்கள் நாங்கள் எப்போது வேண்டுமானாலும் கோயிலுக்கு போக வேண்டும் என சொன்னால் திருவண்ணாமலையில் 1லட்சத்து 47 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். 1 X 4 என்று போட்டு பாருங்கள் அவ்வளவு பேர் கோயிலுக்கு போனால் வெளியூர்காரர்கள் எப்படி போவார்கள்? அதனால்தான் தொடர்ந்து உள்ளூரைச் சேர்ந்த யாரெல்லாம் திருக்கோயிலுக்கு செல்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பாஸ் வழங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.
நான் 17 வயது வரை கோயிலுக்கெல்லாம் சென்று இருக்கிறேன். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அருணகிரிநாதர் விழாவில் பட்டிமன்றம், இலக்கிய சொற்பொழிவு கேட்க செல்வேன். அப்போதெல்லாம் அம்மணி அம்மன் கோபுரத்தோடு செருப்புகளை கழட்டி விட வேண்டும் என சொல்லுவார்கள்.
செல்போனுக்கு தடை
திருக்கோயில் என்பது ஒரு புனிதமானது. ஒரு ஆன்மீக உணர்வோடு போகிறோம். அப்படிப்பட்ட இடத்தில் இந்த செல்போனை பயன்படுத்தி பல பேர் உள்ளே எதை வேண்டுமானாலும் செல்போனில் எடுத்து எதை வேண்டுமானாலும் போட வேண்டும் என்பது தவறானது. அதனால் நிர்வாகமும், அறங்காவலர் குழுவும் பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதை அம்மணி அம்மன் கோபுரத்தோடு நிறுத்தி விட வேண்டும்.
உள்ளே போகும் போது ஆன்மீக உணர்வோடு தான் போக வேண்டும். உள்ளே செல்போனை எடுத்துக் கொண்டு குளத்தில் தண்ணீர் இல்லை, குளத்தில் மீன் செத்துப் போச்சு, இங்க பெயிண்ட் போச்சு என்று புகார் சொல்ல வேண்டும் என்று செல்பவர்களுக்கு ஆன்மீக உணர்வு என்பது இல்லை. அவர்கள் யார்? என்று கண்டுபிடித்து நிறுத்த முடியாது. அதனால் ஒட்டுமொத்தமாக செல்போனை வைத்து விட்டு ஆன்மீக உணர்வோடு சாமி கும்பிட வாருங்கள், அதுதான் சிறப்பாக இருக்கும்.
இந்த ஆட்சி ஆன்மீகத்துக்கு எதிரானது அல்ல. அண்ணாமலையார் கோயிலை தொல்பொருள் துறை கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்தியது திமுக அரசு தான். திராவிடத்தையும், ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கோயில் இணை ஆணையர் சி. ஜோதி, கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, பெ.சு.தி சரவணன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி, வேணுகோபால், இரா.ஸ்ரீதரன், வ.தனுசு, மா. சின்ராஜ், ராமச்சந்திர உபாத்யாயா, எ.வ.வே.கம்பன், எஸ்.கே.பி கருணாநிதி, கார்த்தி வேல்மாறன், அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.