திருவண்ணாமலை பெரிய தெரு சிமெண்ட் சாலை பணிகள் மெதுவாக நடைபெறுவதை பார்த்து அதிருப்தி அடைந்த கலெக்டர், ஒப்பந்தாரருக்கு நோட்டீஸ் அனுப்ப போவதாகவும், 10, 15 தினங்களுக்குள் முடிக்காவிட்டால் மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படும் எனவும் காட்டமாக தெரிவித்தார்.
1080 மீட்டர் சிமெண்ட் சாலை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாடவீதியை சுற்றி சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக பேகோபுரத்தெரு சந்திப்பு (திரௌபதி அம்மன் கோவில்) முதல் காந்தி சிலை வரையில் 1080 மீட்டர் அளவு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ரூ.20 கோடியில் நடைபெற்று வருகிறது. விமான ஓடு தளம் போன்று சிமெண்ட் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வரை 350 மீட்டர் அளவிற்கு பணிகள் நடைபெற்றுள்ளது.
பேகோபுர தெருவில் முதல் அடுக்கு சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. அடுத்ததாக அதன் மீது 2வது அடுக்கு சிமெண்ட் சாலை அமைக்கப்படும். நகராட்சியின் மூலமாக 12 பாதாள சாக்கடைகள் மற்றும் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நிறைவு பெரும் தருவாயில் உள்ளது.
புதியதாக 9 பாதாள சாக்கடை குழி
இந்நிலையில் பெரிய தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க கிருஷ்ணா லாட்ஜ் முதல் அம்மணி அம்மன் கோபுர தெரு சந்திப்பு வரை 200 மீட்டர் அளவில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதில் நகராட்சி மூலம் 9 பாதாள சாக்கடை குழி புதியதாக அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இப்பணியை கலெக்டர் பா.முருகேஷ் இன்று பார்வையிட்டார். அப்போது 5ந் தேதி(இன்று)க்குள் அம்மணி அம்மன் கோபுர தெரு சந்திப்பு வரை பள்ளம் தோண்டப்பட வேண்டும் என்ற நிலையில் பாதி தூரம் வரையில் மட்டுமே பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிருப்தி அடைந்த கலெக்டர் முருகேஷ், நெடுஞ்சாலை துறை உயரதிகாரியை போனில் தொடர்பு கொண்டு 4 நாட்கள் வேலை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இது போக்குவரத்து நிறைந்த பகுதி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே வேலையை விரைவாக முடிக்க வேண்டும். அந்தப் பகுதி (பேகோபுரம்) கூட பிரச்சனை இல்லை. ஆனால் இந்த பகுதி மிக முக்கியமான பகுதி. கூடுதல் ஆட்களை நியமித்து வேலையை முடியுங்கள். ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும் என்றார்.
வியாபாரம் பாதிக்கும்
பிறகு அங்கிருந்த அதிகாரிகளிடம் 10, 15 நாட்களுக்குள் வேலையை முடிக்க வேண்டும். இரவு, பகலாக வேலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வாரத்துக்கு உண்டான பணியை முடிக்காத நிலையில் அடுத்த வாரத்துக்கு என்ன பணியை முடிக்க வேண்டும் என்று எப்படி சொல்வது? என ஆதங்கப்பட்ட கலெக்டர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வேலை தாமதப்பட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. இது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி. பணி காலதாமதமானால் வியாபாரங்கள் பாதிக்கும் என்றார்.
இனிமேல் நான் கொடுக்கிற டைமுக்குள் முடிக்க வேண்டும். இந்தப் பணியை 10, 15 நாட்களுக்குள் முடிக்கவில்லை என்றால் கெட்ட பெயர் தான் ஏற்படும் என காட்டமாக தெரிவித்த கலெக்டர் முருகேஷ் இனி திங்கள், வியாழன், சனிக்கிழமை என வாரத்திற்கு 3 முறை வந்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறினார்.
ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்டப் பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் தட்சணாமூர்த்தி, நகராட்சி பொறியாளர் திரு.நீலேஸ்வரன், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.