Homeசெய்திகள்மாலைக்காக சுடுகாட்டில் காத்திருக்கும் மான்கள்

மாலைக்காக சுடுகாட்டில் காத்திருக்கும் மான்கள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பெருகி வரும் மான்கள் இனத்திற்கு உணவு-தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு தேடி ரோட்டுக்கு வரும் மான்கள் நாய்கள் கடித்து இறப்பது தொடர்கதையாகி உள்ளது. மேலும் அடக்கம் செய்யப்பட்ட பிணத்தின் மீது போடப்பட்ட மாலைகளை உண்பதற்காக சுடுகாட்டில் மான்கள் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் காணப்படும் புள்ளி மான்கள் எப்போதும் கூட்டாக சுற்றித் திரியும். சிங்கம், புலி போன்ற வேட்டை விலங்குகளின் முக்கிய விலங்காக புள்ளி மான்கள் உள்ளது. இந்த வகை மான்கள் 8 முதல் 14 ஆண்டுகள் வரை உயிர் வாழும். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மலையை ஒட்டியுள்ள காட்டில் இந்த வகை மான்கள் அதிகம் உள்ளன.

இது மட்டுமன்றி காஞ்சி கிராமம் போகும் சாலை மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள காப்பு காட்டிலும் அதிகம் காணப்படுகிறது. கிரிவலப்பாதையில் மான்கள் வெளியேறாமல் இருக்க சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே கூச்ச சுபாவம் உள்ள புள்ளி மான்கள் மனிதர்களை நெருங்காமல் ஓடி ஒளிந்து கொள்ளும் தன்மை உடையது. ஆனால் கிரிவலப்பாதையில் அந்த தன்மைக்கு மாறாக அவை உணவுக்காக மனிதர்களை எதிர்பார்த்து கூட்டமாக காத்திருக்கின்றன. பொதுமக்கள் பழங்கள், உணவு வகைகளை அதற்கு அளித்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.

மாலைக்காக சுடுகாட்டில் காத்திருக்கும் மான்கள்

தற்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மான்கள் இங்கிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெருகி வரும் மான்களுக்கு உணவு, தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவை உணவை தேடி காட்டை விட்டு வெளியேறுகிற போது வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும், தரை கிணற்றில் தவறி விழுந்தும் இறந்து விடுகின்றன. வேங்கிக்காலில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கும் இரவு நேரங்களில் மான்கள் வருகின்றன. அந்த பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் உள்ளேயும் ஒரு மான் நுழைந்து விட்டது.

இலை, புற்களை உண்டு வாழும் மான்களின் 1 கிலோ கறி ரூ.500த்திற்கு மேல் விற்கப்படுவதால் மனிதர்களின் வேட்டைக்கும் அவைகள் இரையாகின்றன. சாத்தனூர் பகுதியில் சில நாட்களுக்கு முன் வேட்டையாடி கொல்லப்பட்ட 2 பெரிய மான்கள், 3 குட்டி மான்களின் உடல்களை வனத்துறையினர் கைப்பற்றினர். இதன் மூலம் திருவண்ணாமலை பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மான்கள் வேட்டையாடப்படுவது தெரிய வந்துள்ளது.

மாலைக்காக சுடுகாட்டில் காத்திருக்கும் மான்கள்

இந்நிலையில் கிரிவலப்பாதையில் செங்கம் ரோட்டில் வேலிகள் இல்லாததால் காட்டிலிருந்து வெளியே வரும் மான்கள் அருகில் உள்ள சுடுகாட்டில் காத்திருக்கின்றன. அங்கு புதைக்கப்படும் பிணத்தின் மீது போடப்படும் மாலைகளை அவைகள் உண்கின்றன.

மேலும் அரசு கலைக்கல்லூரி எதிரில் உள்ள தோட்டக் கலை பூங்காவில் இன்று ஒரு மான் இறந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நாய் கடித்து அந்த மான் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கிரிவலப்பாதை காட்டில் ஆயிரக்கணக்கில் மான்கள் உள்ளது. சிங்கம், புலி போன்ற வேட்டையாடும் விலங்கினங்கள் இல்லாததால் மான்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கோடை காலங்களில் உணவு, தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது என்றார்.

கிரிவலப்பாதையில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க வேண்டும், அளவுக்கு அதிகமாக மான்கள் இருந்தால் அவைகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும், இந்த விஷயத்தில் வனத்துறை பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.


திருவண்ணாமலை செய்திகளுக்கு…

     திருவண்ணாமலை செய்திகள்

       Tiruvannamalai Agnimurasu

கட்டுரை-செய்தி-புகைப்படங்களை அனுப்ப…

       contact@agnimurasu.com

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!