Homeசெய்திகள்கிரிவலப்பாதை போலீஸ் ஸ்டேஷனுக்குள் வரும் கிராமங்கள் விவரம்

கிரிவலப்பாதை போலீஸ் ஸ்டேஷனுக்குள் வரும் கிராமங்கள் விவரம்

   மேற்கு போலீஸ் நிலையத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
   ‘உழைப்பவரே உயர்ந்தவர்’ விசிட்டர் புக்கில் எழுதினார்.
   தமிழ்நாடு போலீஸ் சிறப்பாக செயல்படுகிறதா என்பதற்கு தீபத்திருவிழாவே சாட்சி என பேட்டி

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மேற்கு போலீஸ் நிலையத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். இந்த போலீஸ் நிலையத்தில் எந்தந்த கிராமங்கள் சேருகின்றன என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலமும் செல்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், சித்ரா பவுர்ணமி, தீபத் திருவிழாவின் போது 20 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்களும் கிரிவலம் செல்கின்றனர். இது மட்டுமன்றி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிரிவலப் பாதையில் தனியாக ஒரு போலீஸ் ஸ்டேஷனை அமைக்க அமைச்சர் எ.வ.வேலு முயற்சி மேற்கொண்டார். அதன் அடிப்படையில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து திருவண்ணாமலை செங்கம் ரோடு கிரிவலப் பாதை பிரியும் இடத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் ஓய்வறையில் தற்காலிகமாக மேற்கு போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதை ரோந்து வாகனத்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த போலீஸ் நிலையத்தை எ.வ. வேலு இன்று காலை ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார். பிறகு காவல்நிலையத்தில் குத்துவிளக்கேற்றினார். கிரிவலப்பாதை ரோந்து வாகனத்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக அவர் காவலர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

உழைப்பவரே உயர்ந்தவர்

பிறகு அங்கிருந்த விசிட்டர் புத்தகத்தில் ‘உழைப்பவரே உயர்ந்தவர், தமிழ்நாடு காவல்துறை இந்தியாவிற்கே வழிகாட்டும் துறை என்ற பெருமை உண்டு. அதற்காக உழைத்துக் கொண்டு வரும் காவல்துறைக்கு என் நன்றியும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பன். எ.வ.வேலு’ என எழுதினார்.

See also  திருவண்ணாமலை: பஸ்சை ஓட்டிச் சென்றார் பிச்சாண்டி

விழாவுக்கு வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமை தாங்கினார். வேலூர் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, கலெக்டர் பா.முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அண்ணாதுரை எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோதி, அம்பேத்குமார். பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி, நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், மாவட்ட கவுன்சிலர் இல.சரவணன் மற்றும் பலர் விழாவில் பங்கேற்றனர்.

கிரிவலப்பாதை ரோந்து வாகனத்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்களிடம் கூறியதாவது,

54 காவல் நிலையங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 சட்டமன்ற சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 7 மகளிர் காவல் நிலையங்கள், 1 குற்றப்பிரிவு காவல் நிலையம், 3 போக்குவரத்துக் காவல் நிலையம், 4 மதுவிலக்கு காவல் நிலையம் ஆக 54 காவல் நிலையங்கள் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

திருவண்ணாமலைக்கு அதிக அளவு ஆன்மீகப் பெருமக்கள் வருகிறார்கள். திருவண்ணாமலை கிரிவல பாதை 14 கிலோமீட்டர் தூரம் கொண்டதாகும். 500க்கும் மேற்பட்ட துறவிகள் இப்பகுதியில் பயணிக்கிறார்கள். சில நேரங்களில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது

அந்த அடிப்படையில் தான் இங்கு காவல்நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு இடங்களில் போலீஸ் நிலையம் கேட்டிருந்தேன். திருவண்ணாமலை ஆன்மீக ஊர் என்பதால் முன்னுரிமை அளித்து தற்போது மேற்கு காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காவல்நிலையத்தில் 28 போலீசார் பணியில் இருப்பார்கள்.

1912 காவலர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் 7 காவல் உட்கோட்டங்கள் உள்ளது. 1912 காவலர்கள் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 497 பெண் காவலர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள்.

10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு உயர் அதிகாரிகள் தலைமையில் பத்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். காவல்துறை சிறப்பாக செயல்படுகிறதா? என ஆண்டுக்கு ஒரு முறை டெஸ்ட் வைத்து பார்த்தால் திருவண்ணாமலை தீப திருவிழாவை வைத்தே சொல்லி விடலாம். கடந்த தீபத்திருவிழாவிற்கு 35 லட்சம் பேர் வந்தனர். சிறு அசம்பாவிதம் கூட நடைபெறவில்லை. விபத்து கூட ஏற்படாமல் அவர்கள் வீடு போய் சேர்ந்தார்கள். கிரிவல பாதையில் காவல்நிலையம் அமைந்திருப்பது சிறப்பானதாகும்.

See also  தனியார் மருத்துவமனைகளில் பணம் பர்ஸ்ட்¸ சிகிச்சை நெக்ஸ்ட்

ஆட்சி மாற்றம் என்பது இயற்கை

சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் பொருளாதாரம் வளரும். தொழிற்சாலைகள் வர முடியும். உற்பத்தியை அதிகரிக்க முடியும். படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு தர முடியும். வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியும். தொழிற்சாலை அமைக்க எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என முதலாளிகள் கேட்பார்கள். அந்த அடிப்படையில் வெளிநாட்டில் இருக்கக்கூடிய முதலாளிகள், தமிழ்நாட்டுக்கு மூலதனம் செய்ய வருவதற்கு காரணம் தமிழ்நாட்டினுடைய காவல்துறை மிகச் சிறப்பாக சட்டம் ஒழுங்கை காப்பாற்றிக் கொண்டிருப்பதால்தான். தொழில் வளமும், வளர்ச்சிக்கும் காவல்துறை உறுதுணையாக உள்ளது.

ஆட்சி மாற்றம் என்பது இயற்கை. அதை யாராலும் மாற்றி விட முடியாது. அதிகாரிகள் எல்லா காலத்திலும் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். ஆனால் கழக ஆட்சிக்கு வரும் போது தான் காவல்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. காவல்துறைக்கு ஒரு ஆணையம் கொண்டு வந்தது கருணாநிதி தான். சந்திராயன் வெற்றி ஒரு பெருமைப்படக்கூடிய விஷயம் சர்வாதிகார நாடான அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் நிலவில் விண்கலத்தை இறக்க முயற்சி செய்தார்கள் ஆனால் இந்தியாவின் சார்பில் தென்னகத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து அந்த இலக்கை அடைந்திருக்கிறோம் என்பதால் அதற்காக உழைத்த விஞ்ஞானிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞர் பேனா சிலைக்கு ஒரு பெரிய பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக ஒன்றிய அரசு அனுமதி அளித்திருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் வழக்கு தொடர்ந்தார்கள். உச்சநீதி மன்றத்தில் வழக்கு தளளுபடி செய்யப்பட்டு விட்டது. 23 குப்பங்களைச் சேர்ந்த மக்களே வரவேற்றிருக்கிறார்கள்.

See also  விஜிலென்ஸ் போலீஸ் விசாரணையில் பெண் பி.டி.ஓ

இவ்வாறு அவர் கூறினார்.

புதியதாக அமைக்கப்பட்டிருக்கிற மேற்கு போலீஸ் நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதிகள் வருமாறு,

திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையத்திலிருந்து பிரித்து மேற்கு காவல்நிலையத்தில் சேர்க்கப்பட்ட தாய் மற்றும் சேய் கிராமங்கள்

1. கீழ்அணைக்கரை – 1.எம்.ஜி.ஆர் நகர்
2. மேலத்திக்கான் – 2.ஆசிரியர் நகர்
3. எடப்பாளையம் – 3.முருகர்பாளையம்
4. நல்லவன்பாளையம் – 4.கொட்டாவூர்
5. சமுத்திரம் – 5.வடகொட்டா
6. ஆணாய்பிறந்தான் – 6.சிவம் நகர்
7. பண்டிதப்பட்டு – 7.சின்னகோட்டாங்கல்
8. அத்தியந்தல் – 8.வடக்கு கொட்டா
9. அய்யம்பாளையம் – 9.மட்டப்பாறை
10. அய்யம்பாளையம் புதூர் – 10.களர்பாளையம்
11. பெரியகோட்டாங்கல் – 11.ராஜிவ்காந்தி நகர்
12. அஸ்வநாகசுரணை – 12.மும்மூர்த்தி நகர்
13. ஒட்டகுடிசல் – 13.சின்னபுனல்காடு
14. பெரியபாலியப்பட்டு – 14.செல்வபுரம்
15. சின்னபாலியப்பட்டு – 15.வாணியம்பாடி
16. சின்னகோளாப்பாடி – 16.தானாமேடு
17. பெரியகோளாப்பாடி – 17.இந்திரா நகர்

திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திலிருந்து பிரித்து மேற்கு காவல் நிலையத்தில் சேர்க்கப்பட்ட பகுதி

1. திருவண்ணாமலை வார்டு-26 (அரசு கலைக்கல்லூரி, பெரும்பாக்கம் சாலை)

தண்டராம்பட்டு காவல் நிலையத்திலிருந்து பிரித்து மேற்கு காவல் நிலையத்தில் சேர்க்கப்பட்ட பகுதி

1. சாவல்பூண்டி
2. பெரும்பாக்கம்
3. செ.அகரம்
4. கணந்தம்பூண்டி
5. காவேரியாம்பூண்டி

தேசூர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஜெ.ஆனந்தன் மாற்றப்பட்டு திருவண்ணாமலை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்ராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.


 https://youtube.com/@AgniMurasu

 திருவண்ணாமலை செய்திகள்

Tiruvannamalai Agnimurasu


 [email protected]

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!