7 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்காக 150 முன்னணி கம்பெனிகள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் திருவண்ணாமலையில் நடக்கிறது. மேலும் ஐடிஐயில் காலியாக உள்ள 5 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இது குறித்து கலெக்டர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்/மகளிர் திட்டம் சார்பாக டாக்டர் கலைஞரின் நூற்றாண்டில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.
இம்முகாம் வருகிற 27.08.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 7000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் 8ம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாம் அன்று தங்களுடைய 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரி அல்லது https://forms.gle/NSVtGVHwEAECg9qF7 என்ற google படிவத்தில் பதிவு செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் பா. முருகேஷ் தெரிவித்துள்ளார்.
ஐடிஐயில் வேலை வாய்ப்பு
திருவண்ணாமலை, அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில் PPP திட்டத்தின் கீழ் காலியாக உள்ள நான்கு பயிற்றுநர் பணியிடங்கள் மாதம் ரூ.20,000/- மற்றும் ஒரு உதவியாளர் பணியிடம் மாதம் ரூ.12,000/- தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் கீழ்கண்டவாறு நிரப்பப்படவுள்ளது.
தகுதி வாய்ந்தவர்கள், விண்ணப்பங்களை செயலர்/முதல்வர், நிலைய மேலாண் குழு, அரசினர் 04.09.2023 க்குள் தொழிற்பயிற்சி நிலையம், திருவண்ணாமலை -636604 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 04175-233018 தொடர்பு கொள்ளவும்.
வயது வரம்பு அரசு விதிப்படி:
1.பயிற்றுநர் கம்பியாள் காலியிடம் 02
கல்வித்தகுதி- 1) எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பட்டய பொறியியல் (Diploma) தேர்ச்சி பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 2) கம்பியாள் / எலக்ட்ரிசியன் தொழிற்பிரிவில் NTC /NAC சான்றிதழ் மற்றும் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2.பயிற்றுநர் இயந்திரப்பட வரைவாளர் காலியிடம் 02
கல்வித்தகுதி. 1) சிவில் (CIVIL) பிரிவில் பட்டய பொறியியல் (Diploma) தேர்ச்சி பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 2) இயந்திரப்பட வரைவாளர் தொழிற்பிரிவில் NTC /NAC சான்றிதழ் மற்றும் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. உதவியாளர் காலியிடம் 01
கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பிரிவில் பட்டயம் தேர்ச்சி பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
இத்தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.