திருவண்ணாமலை வன்னியர் மடாலயம் சார்பில் நாளை நடக்க இருக்கும் வன்னிய இன மாணவ-மாணவியர்களுக்கு பரிசு அளிக்கும் விழாவில் எ.வ.வேலு பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக ஆதரவு மற்றும் எதிர்ப்பு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளியில் பயிலும் வன்னியர் சமுதாய மாணவர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு நாளை 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குவார் என திருவண்ணாமலை வன்னிய குல சத்திரிய வல்லாள மகாராஜா மடாலய சங்கம் சார்பில் அழைப்பிதழ் வெளியிடப்பட்டிருந்தது.
ஒட்டப்பட்ட கண்டன போஸ்டர்கள்
வன்னியர் சமுதாய விழாவில் மாற்று சமுதாயத்தினர் எப்படி கலந்து கொள்ளலாம் என வன்னியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து கண்டன போஸ்டர்களை ஒட்டியது. மாற்று சமுதாயத்தினர் பங்கேற்றால் கருப்பு கொடி காட்டுவோம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இதையடுத்து அந்த விழாவை ரத்து செய்துள்ளது வன்னிய குல சத்திரிய வல்லாள மகாராஜா மடாலய சங்கம். இது குறித்து அந்த சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை வன்னிய குல சத்திரிய வள்ளாள மகாராஜா மடாலய சங்கத்தின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.வேணுகோபால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பேற்று சமுதாயத்திற்கும் சமுதாய மக்களுக்கும் பல்வேறு நல பணிகளை செய்து வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதி, மத வேற்றுமை பாராமல் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எல்லாவிதத்திலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு பணியாற்றி வருபவரும் மாவட்டத்தின் கல்வி தந்தையும் கொடை வள்ளலுமான அமைச்சர் எ.வ.வேலுவை மடாலயசங்கத்தின் சார்பில் நடைபெற உள்ள பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென மடாலய தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் நேரில் சென்று வலியுறுத்தி அழைத்ததால் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க இசைவு தந்தார்கள்.
எ.வ.வேலு கலந்து கொள்ளவில்லை
தற்போது இதனை அரசியலாக்கி அரசியல் ஆதாயம் பெற்றிடவிரும்பும் சில சுயநலவாதிகளின் தவறான, பொய்யான அவதூறு கருத்துகளை ஒரு சிலர் திட்டமிட்டு நம் மக்களிடையே வெளியிட்டு வருவது பெரும் வேதனையைத் தருகிறது. சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்கவும் சமுதாய மக்களின் வளர்ச்சியை கெடுக்கவும் துணிந்த இந்த துரோகிகளின் செயல் வெட்ககேடானதாகும்.
மாநிலம் முழுவதும் சுற்றிச் சுழன்று பல்வேறு பணிகளை செய்து வரும் பொதுப்பணித்துறை அமைச்சர் எதிர்வரும் 27.08.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சருடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் நம்முடைய மடாலய சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதனை கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
நம்முடைய வன்னிய சகோதரர்கள் பலரின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக, உறுதுணையாக வழிகாட்டியாக இருந்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்க்காகவும் பல்வேறு உதவிகளை செய்து வரும் அமைச்சர் எ.வ.வேலு ஆற்றி வரும் நற்பணிகளை நன்றியுள்ள வன்னிய சமுதாய மக்கள் என்றும் மறந்துவிட போவதில்லை.
வன்னிய சமுதாய மக்களின் இன்ப துன்பங்களில் இரண்டற கலந்து ஒரு சகோதர பாசத்தோடு இணைந்து பயணித்து வருகிற அமைச்சர் எ.வ.வேலுவுக்கு வன்னிய சமுதாய மக்கள் என்றென்றும் துணை நிற்போம் என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.
மடாலய நிர்வாக குழு உறுப்பினர்கள்
1 மண்டி பா.ஏழுமலை
2. சி.எஸ்.சண்முகம்
3. ஜி. சோலை
4. ஆர்.தனக்கோட்டி
5. பா.சௌந்தர்ராஜன்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எ.வ.வேலு கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தைச் சேர்ந்த ஒருவர் பேசும் வீடியோ வெளியாக, அதற்கு பதில் அளித்து அமைச்சருக்கு ஆதரவாக முன்னாள் பா.ம.க எம்.எல்.ஏவும், தற்போது திமுகவில் உள்ள எதிரொலி மணியன் பேசும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. எதிரொலி மணியனுக்கு பதிலடி தரும் வீடியோ ஒன்றும் பேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை வன்னியர் மடாலய நிகழ்ச்சிக்கு அமைச்சர் அழைக்கப்பட்டது ஏன்? என விசாரித்தோம். ஏற்கனவே சேர்மன் பொறுப்பில் இருந்த திமுக பிரமுகர் ஒருவர் எம்.பி சீட்டுக்கு ஆசைப்பட்டு தனது பவரை காட்ட அமைச்சரை அழைத்து அவரை விமர்சனத்தில் சிக்க வைத்து விட்டதாக மடாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்னிமுரசு யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பக்கத்தில் உள்ள பெல் ஐகான் ஐ கிளிக் செய்து புதிய வீடியோக்களை பெறுங்கள்.