கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக திருவண்ணாமலைக்கு வருகிறார். அண்ணாமலையார் கோயில் மற்றும் ஆசிரமங்களுக்கு சென்று தரிசனம் செய்கிறார். இந்நிலையில் அவருக்கு கருப்பு கொடி காட்டப் போவதாக திமுக கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் அறிவித்துள்ளன.
ஐபிஎஸ் அதிகாரியான பீகாரைச் சேர்ந்த ரவீந்திர நாராயண் ரவியான ஆர்.என்.ரவி சிபிஐ மற்றும் உளவுபிரிவில் பணிபுரிந்துள்ளார். நாகலாந்து கவர்னராகவும் பிறகு தமிழக கவர்னராகவும் அவர் நியமிக்கப்பட்டார். அவருக்கும், தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் அதற்கான பைலை திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த வருடம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற தீபத்திருவிழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி அவர் கலந்து கொள்வதாக இருந்தது. பாதுகாப்பு காரணங்களாக அவர் பங்கேற்கவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் முதன்முறையாக 2 நாள் பயணமாக அவர் திருவண்ணாமலைக்கு வருகிறார்.
அவரது உத்தேச பயண விவரம்
10ந் தேதி (வியாழக்கிழமை)
கிரிவலப்பாதையில் உள்ள ஸ்பார்சா ஓட்டலில் தங்குகிறார்.
பகல் 12-30 மணியிலிருந்து 1-30 மணி வரை கிரிவலப்பாதை விஜய் பாலாஜி மகாலில் மத, ஆன்மீக தலைவர்களுடன் சந்திப்பு
மாலை 4 மணி கிரிவலப்பாதை வாயுலிங்கம் எதிரில் உள்ள வள்ளலார் சன்மார்க சங்கம் செல்லுதல். 4-50 வரை இயற்கை விவசாயிகளுடன் சந்திப்பு
5 மணியிலிருந்து 5-30 மணி வரை ரமணாசிரமம்
5-35 மணியிலிருந்து 6-15 மணி வரை விசிறி சாமியார் ஆசிரமம்
இரவு 11 மணியிலிருந்து 11-15 மணி வரை கிரிவலப்பாதையில் நிருதிலிங்கத்திலிருந்து ஆரம்பித்து நடக்கிறார்.
11ந் தேதி (வெள்ளிக்கிழமை)
காலை 6-40 மணியிலிருந்து 7-30 மணி வரை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம்
8-45 மணி முதல் 9-45 மணி வரை தென்மாத்தூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்களுடன் உரையாடல்
12-45 மணியிலிருந்து 1-45 மணி வரை ஜமுனாமரத்தூர் குனிகந்தூர் பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் சந்திப்பு
பகல் திருவண்ணாமலை திரும்புதல்
மாலை 5-45 மணியிலிருந்து 6-20 மணி வரை செஞ்சி கோட்டை வெங்கடரமண கோயிலில் தரிசனம்
இரவு ராஜ்பவன் திரும்புதல்
இந்நிலையில் நாளை 10 தேதி மாலை 4 மணிக்கு ரமணாசிரமம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி இணைந்து கவர்னருக்கு கருப்பு கொடி காட்டப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.