திருவண்ணாமலையில் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிடும் மோகத்தில் அகில பாரத இந்து மகாசபா தலைவர் ஸ்கூட்டியில் பேரிகார்டை இடித்து தள்ளிய வீடியோ வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பின்னணி பாடல்கள், செயற்கை விளைவுகளுடன் கூடிய வீடியோ ரீல்ஸ் எனப்படுகிறது. இதை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அறிமுகப்படுத்தி பாப்புலராக்கியுள்ளது.
இந்த ரீல்ஸ் மோகத்தில் அரசு பேருந்தை மறிப்பது, பைக் ரேஸ் செல்வது போன்ற சேட்டைகள் நடத்தப்படுகிறது. சிலர் இன்னும் ஓவராக போய் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் காதலியை அலேக்காக தூக்கிச் சென்று கொஞ்சுவது, தொழிலாளர்கள் செல்லும் வாகனத்தில் ஏறி டம்மி துப்பாக்கி, கத்தியை காட்டி மிரட்டுவது, நடுரோட்டில் அந்தரத்தில் டைவ் அடிப்பது, பைக்கின் முன்வீலையும், பின்வீலையும் தூக்கி சாகசம் செய்வது, ரயிலில் தொங்கி கொண்ட செல்வது போன்றவைகள் தமிழ்நாட்டில் நடந்தேறின.
ஆன்மீக நகரான திருவண்ணாமலையிலும் ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் சட்டவிரோதமான செயலை செய்வது தொடர்கதையாகி உள்ளது. கடந்த மாதம் திருவண்ணாமலை-வேலூர் சாலையில் இளைஞர் ஒருவர் அரசு பேருந்தை நிறுத்தி ஆக்சிலேட்டரை விடாமல் முறுக்கி புகை மண்டலத்தை ஏற்படுத்திய வீடியோ வைரல் ஆனது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுத்தனர். இதே போல் சில இளைஞர்கள் மேம்பாலத்தில் பைக் ரேஸ் செல்லும் படமும் வெளியாகின.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அகில பாரத இந்து மகாசபாவின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஆர்.ஜி.வாசுதேவன், அண்ணாமலையார் கோயில் அருகில் ஸ்கூட்டி டைப் வண்டியில் வந்து போலீஸ் வைத்துள்ள பேரிகார்டின் மீது மோதி கீழே விழும் காட்சிகளும், பிறகு எழுந்து தள்ளாடியபடியே நின்று பேரிகார்டை நகர்த்தி செல்லும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதை ரீல்ஸ் மோகத்தில் அவர் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு சொத்தை சேதப்படுத்தியதாக வாசுதேவனை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி ஜெயிலில் அடைத்தனர்.
திருவண்ணாமலை பேகோபுரம் 11வது தெருவைச் சேர்ந்த வாசுதேவன், இதற்கு முன் நள்ளிரவு நேரத்தில் பேகோபுரம் எதிரில் மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் நிறுத்தி அதில் ஏறி உட்கார்ந்து அரசு பஸ்சை மறித்ததாகவும் சொல்லப்படுகிறது. அகில பாரத இந்து மகா சபை சார்பில் அடுத்த மாதம் மதுரையில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தலைமை தாங்குபவர் வரிசையில் மதுரை ஆதீனத்திற்கு அடுத்ததாக ஆர்.ஜி.வாசுதேவன் பெயர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.