திருவண்ணாமலையில் ஆடிபவுர்ணமியை யொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். ஐதராபாத்தைச் சேர்ந்த பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கிரிவலம் சென்றனர். இந்நிலையில் இளம் சாமியார் ஒருவரிடம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அருள்வாக்கு கேட்டனர்.
ஆடி பவுர்ணமி – அடி தபசு
சித்ரா பவுர்ணமி போன்று ஆடிபவுர்ணமிக்கும் சிறப்பு உண்டு. சங்கன், பதுமன் என்ற இரு நாக அரசர்களுக்கு சிவபெருமான் பெரியவரா அல்லது திருமால் பெரியவரா என சண்டை மூண்டதால் ஆதிசக்தியிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமானே திருமால் என்பதை சங்கனுக்கும், பதுமனுக்கும் உணர்த்த விரும்பிய ஆதிசக்தி கோமதியம்மனாக வடிவமெடுத்து சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இருந்தார்.
அவருடைய தவத்தினால் சிவபெருமான் ஆடி மாதத்தின் பவுர்ணமி நாளில் சங்கரநாராயணனாக காட்சியளித்தார் இதுவே ஆடி தபசு என்பது வரலாறாகும்.
இந்த நாளில் கிரிவலம் சென்றால் யோகங்கள் கைகூடி, வாழ்வில் வளம் பெறலாம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்றனர்.
இன்று அதிகாலை 3.25 தொடங்கியதால் அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல துவங்கினர். மாலையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் தேரடித் தெருவில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலையாகவே காட்சியளித்தது.
அண்ணாமலைக்கு அரோகரா ஓம் நமச்சிவாயா என்ற பக்தி முழக்கத்துடன் இந்திரலிங்கம், அக்னி லிங்கம், குபேர லிங்கம் உள்ளிட்டஅஷ்ட லிங்கங்களை வழிபட்டு திருநேர் அண்ணாமலையார், அடி அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும் தரிசனம் செய்து 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலையை சுற்றி வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர். இதே போல் அண்ணாமலையார் கோயிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஐதராபாத்தைச் சேர்ந்த பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கிரிவலம் சென்றனர். அடிஅண்ணாமலை அருகே ஒரு சாமியார் அருள்வாக்கு சொல்லி கொண்டிருந்தார். அவரிடம் அருள்வாக்கு கேட்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அந்த சாமியார் பெயர் இளம் பகவான் என்றும் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருடன் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இனி போர்டு வைத்து ஒவ்வொரு பவுர்ணமியிலும் அருள்வாக்கு சொல்ல வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனர்.
திருநேர் அண்ணாமலை கோயில் அருகில் தமிழகத்தில் புகழ் பெற்ற 10 திருக்கோயில்களின் பிரசாதங்கள், அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் விற்பனை செய்யப்பட்டது. இதை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
பர்வதமலையில் சிறப்பு அலங்காரம்
ஆடி பவுர்ணமியை யொட்டி 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 4 ஆயிரத்து 560 அடி உயரமுள்ள பர்வதமலையில் ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரருக்கும், பிரம்மாம்பிகை தாயாருக்கும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பிறகு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மடியேந்தி பிரசாதம் பெற்ற பெண்கள்
சேத்துப்பட்டு பழம்பேட்டை அருள்மிகு முகமாரியம்மன் கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
இதே போல் சேத்துப்பட்டு அடுத்த இந்திர வனம் பச்சையம்மன் கோயில் ஆடித் திருவிழாவில் முனிகளுக்கு படைத்த பிரசாதத்தை குழந்தை வரம் வேண்டி மடியேந்தி பெண்கள் பெற்றனர்.
திருவண்ணாமலை செய்திகளை தெரிந்து கொள்ள…