ஓம் நமசிவாயா, சிவபெருமானின் விருப்பமின்றி எதுவும் நடக்காது என தமிழில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். எங்கு வேண்டுமானலும் அசைவ உணவு விற்பனை இருக்கலாம். ஆனால் கிரிவலப்பாதையில் இருப்பதற்கு அனுமதி கிடையாது என கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்தார். காலையில் திருவண்ணாமலை கிரிவல பாதை அபாய மண்டபம் அருகே விஜய் பாலாஜி திருமண மஹாலில் நடந்த சாதுக்கள் மற்றும் மத தலைவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஓம் நமசிவாயா என்று கூறி கவர்னர் ரவி தனது பேச்சை ஆரம்பித்தார். அதன் பிறகு அனைத்து சாதுக்களே, திருவண்ணாமலை வாசிகளே, சகோதர சகோதரிகளே ஓம் நமச்சிவாய. திருவண்ணாமலை ஒரு ஆன்மீக பூமி. அது நமக்கு தெரியும். இது சிவபெருமானின் பூமி. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை. இந்த பிரபஞ்சத்தில் உச்ச சக்தியான சிவன் பெருமானின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது என தமிழில் பேசினார்.
இதை தொடர்நது கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் பேசியது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
அவர் பேசியதாவது,
நமது நாடு பல அரசாட்சிகளால் பிளவு பட்டு இருந்தாலும் நாம் ஒன்றானவர்கள். நமது நாடு நமது பாரம்பரிய இலக்கியத்தோடு தொடர்புள்ளது. இந்த பிரபஞ்சம் முழுவதும் சிவனால் உருவாக்கப்பட்டவை. நாம் அவரது குழந்தைகள். நாம் அனைவரும் ஒன்றானவர்கள். இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவன் சிவனின் பிரதிபலிப்பு ஆகும். இந்த உண்மையே சனாதன தர்மத்தின் மையமாகும்.
நமது பாரத நாடு கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை பரந்து விரிந்துள்ளது. சனாதன தர்மம் தனி ஒருவருக்கானது அல்ல. இது நமது பாரத குடும்பத்திற்கானது. நமது பிரார்த்தனைகள் சுயநலமற்றது. அனைவரும் வாழ வேண்டும் என்று பரந்து விரிந்த பிராத்தனையே சனாதன தர்மமாகும்.
பாரத நாட்டின் ஆன்மீக தலைநகரம் தமிழ்நாடு
நான், எனது என்ற குறுகிய மனப்பான்மை இல்லாமல், நாம், நமது என்ற பரந்த மனப்பான்மைக்கு உரியது சனாதன தர்மமாகும். குறுகிய மனப்பான்மை உடைய கொள்கையினால் இந்த சனாதன தர்மம் சில அழிவுகளை சந்திக்க நேர்ந்தது.
இந்நாடு அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் 1947ல் உருவாக்கப்பட்டது அல்ல. 1947ல் நாம் விடுதலை மட்டுமே அடைந்தோம். நான் தமிழகத்தின் பல பகுதிகளில் சுற்றிப் பார்க்கும் போது எனக்கு ஒரு உண்மை தெரிகிறது. பாரத நாட்டில் ஆன்மீக தலைநகரம் இந்த மாநிலம் என்பது புரிகிறது.
நமது ரிஷிகளும் நாயன்மார்களும் ஆழ்வார்களும், திருமூலர்களும் அவதரித்து நாம் யார் என்பதை நமக்கு உணர்த்தி நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற உண்மையை உணர்த்திருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் நாம் உண்மையான முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அனைத்து துறைகளிலும் உண்மையான முன்னேற்றத்தை நோக்கி நமது நாடு சென்று கொண்டிருக்கிறது. அனைவருக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது அது என்னவென்றால் மக்கள் அனைவரையும் ஆன்மீக ஆற்றல் உடையவர்களாக ஆக்குவது.
கிரிவலப்பாதையில் அசைவ உணவு
இளைய சமுதாயத்திற்கு பாரதத்தின் ஆணிவேரான ஆன்மீகத்தை உணர்த்தி அதன் ஆற்றலை உலகமெங்கும் பரப்பும் மிகப் பெரிய பொறுப்பினை நாம் அனைவரும் ஏற்று சிறப்புடன் செய்து தர வேண்டும்.
சாதுக்களாகிய உங்களது கடமை ஆலயத்துக்குள்ளோ, ஆசிரமத்துக்குள்ளோ குறுகி விடக் கூடாது இந்த சமுதாயத்துக்கு பரந்து விரிய வேண்டும். கிரிவலப் பாதையில் நீங்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள் சரி செய்யப்படக் கூடியதாகும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
அசைவ உணவுகள் எங்கு வேண்டுமானாலும் விற்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சிவனின் கிரிவலப் பாதையில் விற்பதற்கு அனுமதியே கிடையாது. கிரிவலப் பாதையில் போதிய அளவு கழிவறைகள் தேவை. அதை என்னால் முடிந்த அளவு நிறைவேற்றி தருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கவர்னிடம் கமலா பீடத்தின் நிறுவனரும், பொறியாளருமான சீத்தா சீனுவாசன் கோரிக்கை மனு ஒன்றினை வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
இந்த ஆன்மீக நகரத்தின் கிரிவல பாதை 16 கி.மீ. தூரமுள்ளது. நாளுக்கு நாள் பக்தர்கள் அதிகரித்து வருவதால் பவுர்ணமி கிரிவல நேரத்தில் மக்கள் கிரிவலம் செல்வது சிரமமாக உள்ளது. எனவே இந்த கிரிவல பாதையில் 16 கி.மீ. தூரத்திற்கு மேம்பால நடைபாதை அமைத்து தந்தால் பக்தர்கள் மேம்பாலம் வழியாகவும், இப்போதிருக்கும் நடைபாதை வழியாகவும் கிரிவலம் வந்தால் சிரமம் தவிர்க்கப்படும். எனவே இம் மேம்பாலம் நடைபாதை அமைப்பதற்கு ரூ.700 கோடி செலவாகும் என பொறியாளர்கள் கணித்துள்ளனர். இந்த திட்டத்தினை நிறைவேற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உரிய வழிமுறையினை தமிழக அரசிடம் பெற்று இதற்கான நிதி ரூ.700 கோடியை மத்திய அரசின் சிறப்பு நிதி மூலமோ அல்லது மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் மூலமாகவோ பெற்று தந்தால் வாழ்நாள் முழுவதும் தங்களை மறக்க மாட்டோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.