கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் கீழ் ரூ.1000 பெற விண்ணப்பித்த குடும்ப அட்டைதாரர்களின் உண்மைத்தன்மை குறித்து கலெக்டர் பா.முருகேஷ் வீடு வீடாக சென்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது விண்ணப்பித்துள்ள பெண்களின் புகைப்படத்தையும், விவரங்களையும் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார்.
கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் அடுத்த மாதம் 15ந் தேதி அன்று தொடங்கவுள்ளது. இத்திட்டத்துக்கான ரூ.7ஆயிரம் கோடி நிதியும் முதற்கட்டமாக அரசு ஒதுக்கியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இதற்கான விண்ணப்பங்கள் மொத்தம் 991 முகாம்களின் மூலம் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதன் மூலம் 7.89 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 81 சதவிதம் குடும்ப அட்டைதாரர்கள் ரூ.1000 கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 1.70 லட்சம் பேர் கொடுக்கப்பட்ட விவரத்தின் உண்மைத் தன்மை குறித்து களஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு, கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது. அதில் கார் வைத்திருப்பவர்களின் விவரங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திடமிருந்து சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை நகரில் அண்ணாநகர் 3வது தெருவில் கலெக்டர் பா.முருகேஷ் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்திருந்தவர்களின் வீடுகளுக்கு இன்று காலை சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஒரு பெண் விண்ணப்பதாரரிடம் சொந்த வீடா? என கேட்டார். அதற்கு அந்த பெண் வாடகை வீடு என பதிலளித்தார். என்ன வண்டி வைத்திருக்கிறீர்கள்? என கேட்டதற்கு வீட்டின் முன் நின்றிருந்த சைக்கிளை அந்த பெண் காட்டினார்.
மேலும் விண்ணப்பதாரரை தனது செல்போனில் படம் எடுத்துக் கொண்ட கலெக்டர், விண்ணப்பதாரரின் மாத வருமானம், கணவர் பெயர், அவர் செய்யும் வேலை, மின்சார இணைப்பில் உள்ள பெயர் போன்ற விவரங்களையும் பதிவு செய்து கொண்டார்.
ஆய்வு மேற்கொள்ளும் போது சேகரிக்கப்படும் விவரங்களை அப்போதே ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், டைரியில் குறித்துக் கொண்டு மொத்தமாக பதிவு செய்வது என்பது இருக்கக் கூடாது எனவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கலெக்டர் தண்டராம்பட்டு, செங்கம் ஆகிய வட்டங்களிலும் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி தாசில்தார்கள் எஸ்.சரளா, அப்துல்ரகுல், ராஜேந்திரன், திருவண்ணாமலை வருவாய் ஆய்வாளர் எஸ்.சுதா, கிராம நிர்வாக அலுவலர்கள் அ.ஏழுமலை, மு.இளையராஜா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சென்றிருந்தனர்.