எஸ்.ஐ தேர்வில் செல்போன் மூலம் வினாத்தாளை வெளியில் அனுப்பி பதிலை பெற்ற சம்பவத்தில் எஸ்.ஐ மனைவி கைது செய்யப்பட்டார். மேலும் அவரது கணவரும், மற்றொரு எஸ்.ஐயும், டாக்டரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடத்தப்படுகிறது. இத் தேர்வினை கடந்த 26ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1471 பெண்கள் உள்பட 5 ஆயிரத்து 252 பேர் எழுதினார்கள். அரசு கலைக் கல்லூரி, சண்முகா தொழிற்சாலை கல்லூரி, எஸ்.ஆர்.ஜே.டி.எஸ் பள்ளி, கரண் கலை அறிவியல் கல்லூரி, கம்பன் கல்லூரி, சிஷ்யா மெட்ரிகுலேஷன் பள்ளி என 6 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.
கம்பன் கல்லூரியில் சென்னை ஏர்போர்ட்டில் எஸ்.ஐ யாக பணிபுரிந்து வரும் சுமன் என்பவரின் மனைவி லாவண்யா எஸ்.ஐ தேர்வை எழுதினார். அவரை தேர்வில் வெற்றி பெறச் செய்வதற்காக காவல்துறையில் உள்ள சிலர் திரைமறைவு வேலையில் ஈடுபட்டனர்.
இதனால் தேர்வு மையத்திற்குள் வரிசையில் நிற்க வைக்கப்படாமல், எந்தவித சோதனையும் நடத்தப்படாமல் லாவண்யா அனுப்பி வைக்கப்பட்டார். தேர்வு அறையில் வினாத்தாள் விநியோகிக்கப்பட்ட உடன் அதை எடுத்துக் கொண்டு லாவண்யா பாத்ரூமிற்கு சென்றாராம். 20 நிமிடத்திற்கு மேலாகியும் அவர் திரும்பி வரவில்லை.
அந்த அறையின் கண்காணிப்பாளராக இருந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏட்டு ஒருவர், லாவண்யாவின் மேசைக்கு சென்று பார்த்த போது வினாத்தாளையும் அவர் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. சிறிது நேரம் கழித்து பாத்ரூமிலிருந்து வெளியே வந்த லாவண்யாவை சோதனையிட்டதில் அவர் ஜாக்கெட்டுக்குள் செல்போனை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செல்போன் மூலம் வாட்ஸ் அப்பில் வினாத்தாளை வெளியில் அனுப்பி பதிலை பெற்றது தெரியவந்தது.
லாவண்யா கையுங்களவுமாக பிடிபட்டதும் காவல்துறையில் அவருக்கு திரைமறைவில் உதவி செய்த இருவர், கண்காணிப்பாளரிடம் அவர் எஸ்.ஐ மனைவி, விட்டு விடுங்கள் என கூறினார்களாம். ஆனால் நேர்மையானவரான கண்காணிப்பாளர் இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து பகல் 2-30 மணியளவில் லாவண்யா தேர்வு மையத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். அப்போது அவர் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி இருந்தார். எஸ்.ஐ மனைவி வெளியேற்றப்பட்டது ஊடகங்களில் வெளியானது. ஓசூரில் மைக்ரோ போன் மூலம் தேர்வு எழுதிய இளைஞரும், அவருக்கு உதவிய தங்கையும் கைது செய்யப்பட்ட நிலையில் திருவண்ணாமலையில் சிக்கியவர் எஸ்.ஐ மனைவி என்பதால் கைது செய்யப்படவில்லையா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யா, அவருக்கு உதவி செய்த அவரது கணவரும், எஸ்.ஐயுமான சுமன், அவலூர்பேட்டை எஸ்.ஐ சிவக்குமார், செங்கம் பகுதியைச் சேர்ந்த டாக்டர் பிரவீன்குமார் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். சுமன் ஏற்கனவே திருவண்ணாமலையில் எஸ்.ஐயாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.