Homeசெய்திகள்அக்னி குளத்திற்கு சீல்-சாமியார் வெளியேற்றம்

அக்னி குளத்திற்கு சீல்-சாமியார் வெளியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான அக்னி குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையாக அங்கிருந்த சாமியார் வெளியேற்றப்பட்டார். பிறகு குளத்தின் கதவுகளுக்கு பூட்டு போடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

அக்னி தேவன் மூழ்கிய குளம்

திருவண்ணாமலை ராஜகோபுரத்திலிருந்து கிரிவலம் ஆரம்பிக்கும் போது சக்கரை குளத்தை அடுத்து பாதையை ஒட்டினால் போல் இருக்கும் 2வது குளம்தான் அக்னி குளம். மலை அடிவாரத்தில் இருப்பதனாலும், இறைவன் அக்னி சொரூபமாக நின்ற மலையிலிருந்து இக்குளத்திற்கு நேரடியாக தண்ணீர் வருவதானாலும் இக்குளத்திற்கு அக்னி குளம் என பெயரிடப்பட்டதாகவும், அக்னி தேவன் தனக்கு ஏற்பட்ட பாவத்தை இந்த குளத்தில் மூழ்கி போக்கிக் கொண்டதால் அக்னி குளம் என பெயர் வந்ததாகவும் இருவேறு கதைகள் வழக்கத்தில் உள்ளன.

இந்த குளத்தில் பவுர்ணமி நாளில் முழ்கி எழுந்தாலோ அல்லது தீர்த்தமாக தெளித்து கொண்டாலோ பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் அந்த குளத்தில் கை, கால்களை நனைத்து கொண்டும், நீரை தலையில் தெளித்து கொண்டும் செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தனர்.

அக்னி லிங்கம் எது? குழம்பிய பக்தர்கள்

இந்நிலையில் இந்த குளம் 2016ம் ஆண்டு பேரூர் ஆதீனம் சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. 2019ம் ஆண்டு இக்குளம் தூர் வாரி முடிக்கப்பட்டு அப்போது பெய்த மழையினால் குளம் முழுவதும் நிரம்பியது. இந்த தூர் வாரும் பொறுப்பில் இருந்த சோணாசலம் என்பவர் இந்த குளத்தின் கரையில் தடுப்புகளை ஏற்படுத்தி லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜைகளை செய்து வந்தார். பவுர்ணமி நாட்களில் நடைபெறும் பூஜைகளில் இங்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

See also  திருவண்ணாமலை இளைஞர் படுகொலை

அக்னி குள கரையில் லிங்கம் இருப்பதனால் இதுதான் அக்னிலிங்கம் என பக்தர்கள் ஏமாந்து விடுவதாக அறநிலையத்துறைக்கு புகார்கள் சென்றன. (அக்னி லிங்கம் என்பது குளத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி உள்ளது)

ஊர் பொதுமக்கள் சார்பில் அண்ணாமலையார் கோயில் இணை ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ள புகாரில் கூறியிருப்பதாவது.

கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அக்னி குளத்தை சீரமைக்கும் பணியில் ஒரு தனியார் சம்பந்தப்பட்ட நபரால் பொதுமக்கள் மற்றும் பக்தகோடிகளிடம் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், ஆசிரமங்களிடம் நிதியைத் திரட்டி பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி நிறைவுற்றது.

அக்னி குளத்திற்கு சீல்-சாமியார் வெளியேற்றம்

பல லட்சம் ரூபாய் வசூல்

ஆனால் அந்த நபர் அக்னி குளத்தை சீரமைத்தப்பிறகும் திருக்கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல் புதியதாக வழக்கில் இல்லாத வகையில் புதிய லிங்கத்தை பிரதிஷ்டை செய்து குளத்தை ஆக்கிரமிப்பு செய்ததுடன், எவ்வகையில் பொருந்தாத வகையில் பூஜை புனஸ்காரங்கள் என்ற பெயரில் கிரிவல பக்தர்களையும் செல்வந்தர்களையும் மனதை கவர்ந்து பல்வேறு வகையில் பல லட்சம் ரூபாய் பொருளீட்டுவதுடன் பாமர மக்கள் ஏழை, எளியவர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி மறுக்கின்றார்.

இதன் மூலமாக பெருமதிப்பிலான வருவாயை யாருக்கும் எவ்வித பலனுமின்றி சுயலாபமாக மேற்படி நபர் அனுபவித்து வருகிறார். இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்களை பெரும்பாலானோர் அக்னி குளத்தில் அமைக்கப்பட்ட புதிய லிங்கத்தையே அக்னி லிங்கம் என நம்பவைத்து பெரும் தொகையை வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.

See also  ரூ.1 கோடியே 15 லட்சம் பாக்கி- லயன்ஸ் கிளப் ஆபீசுக்கு சீல்

மேலும் அக்னி லிங்கத்தில் அமைந்துள்ள புறக்காவல் அறையை பல்வேறு பூஜை படங்களை தனது சுயக்கட்டுப்பாட்டில் வைத்து காவலர்களை பணிய வைத்து பொதுமக்கள் மீது ஏவிவிடுகிறார். இதனால் பாமர மக்களோ பக்தர்களோ அக்னி குளத் தீர்த்தத்தை மக்கள் பயன்படுத்தமுடியாமல் தடுத்து வருகிறார்.

காலங்காலமாக வரலாற்று சிறப்புமிக்க அக்னி லிங்கம் தரிசனம் வழிபாடு வழக்கொழிந்து வருவது நிதர்சனமான உண்மையாகும். எனவே காலங்காலமாக இருந்து வருகின்ற அஷ்ட லிங்கத்தில் ஒன்றான அக்னி லிங்கம் வழிபாடு மீண்டும் சிறப்பான முறையில் நடைபெற வேண்டியும், புதிய ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டியும் அக்னி குளத்தை அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டியும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

காத்திருந்த அதிகாரிகள்

இதன் பேரில் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அக்னி குள ஆக்கிரமிப்பு நடவடிக்கையை நேற்று இரவு மேற்கொண்டது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள், இணை ஆணையர் ஜோதி மற்றும் கோயில் அலுவலர்கள், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் அக்னி குளத்திற்கு சென்றனர்.

அப்போது சாமியார் அங்கில்லை. அவர் தியானத்தில் இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அவர் வரும்வரை அலுவலர்களும், போலீசாரும் காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து வந்த சாமியாரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கூறப்பட்டது. அதற்கு இப்போது பூஜை செய்ய அனுமதி அளிக்கும்படி சாமியார் கேட்கவே பூஜைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதுவரை அதிகாரிகள் குளத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

See also  திருவண்ணாமலை:காட்டில் மர்ம பையை எடுத்த கர்நாடக போலீஸ்

பூட்டி சீல் வைப்பு

பூஜை முடிந்ததும் சாமியார் வெளியேறாமல் படிக்கட்டில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரிடம் கோயில் ஊழியர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அது பலனிக்கவில்லை. இதையடுத்து கோயில் ஊழியர்களால் அவர் வெளியேற்றப்பட்டார். (வீடியோ)

இதையடுத்து குளத்தின் கதவுகளை கோயில் ஊழியர்கள் பூட்டி சீல் வைத்தனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கூட்டத்தினரை போலீசார் கலைந்து போகச் செய்தனர்.

இது குறித்து அடியார்கள் மற்றும் பக்தர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது,

இது தான் ஆதி அக்னி லிங்கம்

அக்னி குளத்தை செப்பனிட்ட பிறகு கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்காமல் ஒரு தனி நபர் தலைமையின் கீழ் அங்கு புதியதாக லிங்கத்தை வைத்து இதுவே ஆதி அக்னி லிங்கமென்றும் குளத்தில் தோண்டும் போது கிடைத்தது என்றும் போலியாக வரலாற்றை திரித்து பொதுமக்களை திசை திருப்பி பௌர்ணமி, பிரதோஷ தினங்கள் போன்ற முக்கிய தினங்களில் யாகம் மற்றும் பூஜைகள் நடத்தி லட்சக்கணக்கில் வசூல் வேட்டை செய்தனர். அது இப்போது தடுக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். அதே சமயம் அந்த லிங்கத்தையும், ஆக்கிரமிப்புகளையும் முழுவதுமாக அகற்றி பக்தர்களின் பயன்பாட்டிற்காக முழுவதுமாக விட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


 TIRUVANNAMALAI AGNIMURASU

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!