திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தோட்டக் கலைத்துறை சார்பில் 9 ஏக்கர் பரப்பளவில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் அம்சங்கள் குறைவாக உள்ளது. மேலும் இங்கு போட்டோ ஷூட் ரூ.500, குறும்படம் எடுக்க ரூ.5 ஆயிரம், திரைப்படம் எடுக்க ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அரசு கலைக்கல்லூரி அருகே தோட்டக்கலைத்துறை சார்பில் சிறுவர்களுக்கு விளையாட்டு இடம், பொதுமக்களுக்கு பொழுது போக்கு வசதியாக பூங்கா மற்றும் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய தோட்டக் கலை பூங்கா 9 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அரசு 2018-19ம் ஆண்டு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த பூங்கா அமைக்கும் பணிகடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் பணிகள் நிறைவடைந்ததையொட்டி கருணாநிதி நூற்றாண்டு பூங்கா திறப்பு விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில் அமைச்சர் எ.வ.வேலு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
மக்களின் பொழுது போக்குக்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் சிறுவர் பூங்கா, நடைபயிற்சி மேற்கொள்ளும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. பூங்கா நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.20, சிறுவர்களுக்கு ரூ.10, நடைப் பயிற்சி மேற்கொள்ள மாதம் ரூ.300, போட்டோ ஷூட் ரூ.500, குறும்படம் எடுக்க ரூ.5 ஆயிரம், திரைப்படம் எடுக்க ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக் கப்படுவார்கள். நடைப்பயிற்சி மேற்கொள்ள காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையும் அனுமதிக்கப்படுவார்கள்.
தோட்டக்கலை துறை சார்பில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் சிறுவர்களுக்கு பொழுது போக்குக்கு வசதியாக போதிய விளையாட்டு உபகரணங்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. சிறுவர் பூங்கா அமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பறவைகள் சரணாலயம், மலர் பூங்கா அமைக்கப்படும் என சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அமைக்கப்படவில்லை. பூங்காவில் மக்கள் கண்டுகளிக்கும் அம்சங்கள் ஏதுமில்லை. இதற்கு ரூ.1 கோடி செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.