ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் கடந்த 2 மாதங்களாக ஆவின் நெய், வெண்ணெய் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தயாரிக்கப்படும் பகுதியிலேயே நெய், வெண்ணெய் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பக்தர்களும் ஆவின் பூத்களில் நெய் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பால் உற்பத்தி அதிகரித்து வருகிறது. கறவை மாடுகளின் எண்ணிக்கையும் 12 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் பால் உற்பத்தியில் முன்னணியில் முதல் 15 இடங்களில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 11 வது இடத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் எனப்படும் ஆவின் நிறுவனம் ஒரு நாளைக்கு 35 லட்சம் லிட்டருக்கு மேல் பாலை வாங்குகிறது. இந்நிறுவனம் பாலின் மூலமாக 230 வகையான பொருட்கள் தயாரித்தாலும் அவை பரவலாக விற்பனைக்கு வருவதில்லை. இதில் ஆவின் நெய், வெண்ணெய் தரமாக இருப்பதால் மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த தீபாவளி, பொங்கல் முதல் கொண்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆவின் நெய், வெண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், கடந்த ஆட்சியில் தினமும் 40 லட்சமாக இருந்த பால் லிட்டராக இருந்த பால் கொள்முதல் திமுக ஆட்சியில் 30 லட்சமாக குறைந்ததே இதற்கு காரணம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
திருவண்ணாமலை பகுதிகளிலும் கடந்த 2 மாதங்களாக ஆவின் நெய், வெண்ணெய் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் ஆவினை நம்பி பல இடங்களில் பூத்களை அமைத்தவர்களின் வருமானம் குறைந்துள்ளது.
திருவண்ணாமலை- செங்கம் போகும் சாலையில் உள்ள அம்மாபாளையத்தில் ஆவின் மூலம் ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் மற்றும் 20 மெட்ரிக் டன் பவுடர் தயாரிக்கும் திறன் கொண்ட ஆலை கடந்த 2014ம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு வெண்ணெய், நெய் உற்பத்தி நடைபெறுகிறது.
ஆனால் இங்கு தற்போது குறைந்த அளவே நெய் தயாரிக்கப்படுவதாகவும், அது மற்ற ஊர்களுக்கு அனுப்பப்படுவதாகவும், விற்பனைக்கு திருவண்ணாமலைக்கு தருவதில்லை என்று கூறப்படுகிறது. தயாரிக்கப்படும் பகுதியிலேயே நெய், வெண்ணெய் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் பக்தர்களும் ஆவின் பூத்களில் நெய் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது. இதனால் தனியார் நெய் விற்பனை அதிகரித்துள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருவண்ணாமலையில் ஆவின் நெய், வெண்ணெய் கிடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமும் செய்திகளை பெற இணைவீர்