திருவண்ணாமலை வன்னியர் மடம் சார்பில் நடக்கும் விழாவில் வன்னிய சமுதாய மாணவர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மாற்று சமூகத்தினரை அழைத்தால் கருப்பு கொடி காட்டுவோம் என வன்னியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளியில் பயிலும் வன்னியர் சமுதாய மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா திருவண்ணாமலை திருவூடல் தெருவில் உள்ள வன்னியர் திருமண மஹாலில் வருகிற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என திருவண்ணாமலை வன்னிய குல சத்திரிய வல்லாள மகாராஜா மடாலய சங்கம் சார்பில் அழைப்பிதழ்கள் அச்சடித்து வெளியிடப்பட்டுள்ளன.
அழைப்பிதழின் முகப்பில் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு படம் இடம் பெற்றுள்ளது. இந்த விழாவுக்கு அந்த மடாலய சங்கத்தின் தலைவரும், முன்னாள் திமுக எம்பியுமான வேணுகோபால் தலைமை தாங்குவதாகவும், மாணவர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு, கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும், துணை சபாநாயகர் பிச்சாண்டி வாழ்த்துரை வழங்குவதாகவும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
அந்த சமுதாயத்தைச் சேர்ந்த சிலர், மாணவர்களுக்கு பரிசு வழங்க வன்னியர் இனத்தில் ஒருவருக்கு கூட தகுதியில்லையா? என அழைப்பிதழை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மடாயல தலைவர் வேணுகோபாலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை காந்திசிலை அருகிலுள்ள வன்னியர் மடத்தில் திருவண்ணாமலை தெற்கு, மேற்கு மாவட்ட வன்னியர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு வன்னியர் சங்க தெற்கு மாவட்ட செயலாளர் க.நாராயணசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் த.ஏழுமலை, மாவட்ட தலைவர் இரே.ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட தலைவர் மு.பெரியசாமி அனைவரையும் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பாமக தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் பெ.பக்தவச்சலம், மேற்கு மாவட்ட செயலாளர் இல.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வருகிற 27ந் தேதி திருவண்ணாமலை வன்னியகுல சத்திரியர் வள்ளால மகாராஜா மடாலய சங்கம் நடத்தும் வன்னிய சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இன்னாள், முன்னாள் அமைச்சர்கள், ஓய்வுபெற்ற நீதியரசர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அழைத்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வது,
வரும் 27ந் தேதி நடைபெறும் விழாவில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து வன்னிய சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது,
எதிர்ப்பை மீறி மாற்று சமூகத்தினர் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கினால் அன்றைய தினம் (27ந் தேதி) காலை 10 மணியளவில் விழா நடைபெறும் இடத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது, மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்னியர் சமூகத்தினர் கலந்து கொள்ளும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்துவது,
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாமக மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் திருவண்ணாமலை நகர செயலாளர் (பாமக) எஸ்.பி.உதயராகவன் நன்றி கூறினார்.
https://youtube.com/@AgniMurasu