திருவண்ணாமலை பகுதியில் நேற்று இரவும், இன்று இரவும் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. நொச்சிமலை கிராமத்திற்கு செல்லும் ரோடு வெள்ளத்தால் முழ்கியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு பெய்த கன மழையினால் திருவண்ணாமலையில் ஏரிகள் நிரம்பி ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சுமார் 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் வீடுகளை காலி செய்து உறவினர் வீடுகளில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஏரிகளில் நிரம்பி வழியும் உபரி நீர் செல்ல புதியதாக கால்வாய்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 632.80 மில்லி மீட்டர் மழை பெய்தது.
ஒவ்வொரு தாலுகாக்களிலும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு,
திருவண்ணாமலை 56.00, செங்கம் 42.60, போளூர் 62.80, ஜமுனாமரத்தூர் 26.00, கலசப்பாக்கம் 89.00, தண்டராம்பட்டு 30.40, ஆரணி 47.40, செய்யாறு 78.00, வந்தவாசி 26.00, கீழ்பென்னாத்தூர் 84.00, வெம்பாக்கம் 53.00, சேத்துப்பட்டு 37.60
இந்த மாதம் கலசப்பாக்கம், மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் பகுதியாக விளங்கி வருகிறது. கடந்த 19ந் தேதி அங்கு 125.60 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதைத் தொடர்ந்து நேற்று 89 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் மழை
மாவட்டத்தில் நேற்று பரவலாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. ஏரி மற்றும் அணைகளில் நீர் வரத்து அதிகரித்தது. திருவண்ணாமலையில் நேற்று இரவும், இன்று இரவும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
குறிப்பாக நொச்சிமலை, நாச்சிப்பட்டு பகுதிகளில் கடந்த 2021ம் ஆண்டு போல் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. நாச்சிப்பட்டில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் குடியிருக்கும் வீடு உள்ள தெருக்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பகுதிகளில் நொச்சிமலை ஏரி உபரி நீர் செல்ல புதியதாக கால்வாய் கட்டப்பட்டும் வீடு, கடைகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. நொச்சிமலை செல்லும் ரோடு வெள்ளத்தால் முழ்கியுள்ளது.
குறிப்பிட்ட சில இடங்களில் ஓடைகளை குறுக்கி பிளாட்டுகள் போடப்பட்டதே வெள்ளத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. ஓடைகளை கண்டறிந்து அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.