கலசபாக்கம் அடுத்த பருவதமலை, மலை ஏறும் போது சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி தென்மகாதேவமங்கலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 4 ஆயிரத்து 560 அடி உயர பருவதமலை அமைந்துள்ளது. இங்கு மல்லிகார்ஜுனேஸ்வரர் சமேத பிரம்மராம்பிகை கோயில் உள்ளது.
தென்னிந்தியாவில் புகழ் பெற்ற மலைக்கோயில்களில் ஒன்றான பருவதமலைக்கு பல மாநிலங்களிலிருந்தும் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகின்றனர். வடநாட்டில் இறைவனுக்கு பக்தர்களே அபிஷேகம் செய்வதுபோல் இங்கும் இறைவனுக்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம். இதனால் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், கார்த்திகை தீப நாட்களில் ஏராளமான பக்தர்கள் பருவதமலை மீது ஏறி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வணங்கி விட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் சென்னையிலிருந்து பருவதமலை பயணம் என்ற பெயரில் சென்னையிலிருந்து பக்தர்கள் பஸ்களில் அழைத்து வரப்படுகின்றனர். ஒருவருக்கு ரூ.1000 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உணவு மற்றும் மற்ற செலவுகளுக்கு பக்தர்கள் பணம் தர வேண்டும்.
இதே போன்று சென்னையிலிருந்து 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் மினி பஸ்சில் பருவதமலை வந்தனர். அதில் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள நாராயணபுரம் கிராமத்தில் ஆச்சாரி வேலை செய்து வந்த முருகேசன்(வயது 48) என்பரும் ஒருவர்.
இக்குழுவினர் நேற்று இரவு 12 மணியளவில் மலை ஏறத் தொடங்கினர். அதிகாலை 5 மணி அளவில் முருகேசனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
தீயணைப்பு துறை மூலம் அவரது உடல் மலையிலிருந்து இறக்கப்பட்டது. பிறகு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பருவதலையில் ஏற்றப்பட்ட மகாதீபத்தை தரிசிக்க சென்ற தூத்துக்குடி துறைமுக ஊழியர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது.