Homeசெய்திகள்மாடவீதியில் சிமெண்ட் சாலை-சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

மாடவீதியில் சிமெண்ட் சாலை-சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

திருவண்ணாமலை மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பதாக வழக்கறிஞர் சங்கர் தெரிவித்துள்ளார்.

அக்னிகுளத்தில் பூஜைகளை செய்து வந்த சாமியாரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி குளத்தை பூட்டி சீல் வைத்த அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இத்தகவலை அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அக்னிகுளத்தில் பூஜைகளை செய்து வந்த சாமியாரை பேரூராதீன துறவி என்பதில் இருந்து விடுவிப்பதாக அந்த ஆதீன கட்டளை தம்பிரான் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அக்னி குளம் 2016ம் ஆண்டு பேரூராதீனம் சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. பிறகு சோணாசலம் என்பவர் இந்த குளத்தின் கரையில் தடுப்புகளை ஏற்படுத்தி லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜைகளை செய்து வந்தார். அக்னிலிங்கம் வேறு இடத்தில் இருக்க அக்னி குள கரையில் லிங்கம் இருப்பதனால் இதுதான் அக்னிலிங்கம் என பக்தர்கள் ஏமாந்து விடுவதாக அறநிலையத்துறைக்கு புகார்கள் சென்றன.

இதன் பேரில் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அக்னி குள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விதமாக சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சோனாசல சாமியார் வெளியேறாமல் படிக்கட்டில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து கோயில் ஊழியர்களால் அவர் வெளியேற்றப்பட்டார். பிறகு குளத்தின் கதவுகளை கோயில் ஊழியர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

இந்த நடவடிக்கையை கண்டித்து பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் நேற்று மாலை காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநில துணை தலைவர் டி.எஸ்.சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் (வடக்கு) சுரேஷ் மாவட்ட தலைவர்கள் எஸ்.செல்வராஜ், ரா.முருகன், கே.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜி.விக்னேஷ் அனைவரையும் வரவேற்றார்.

மாநில தலைவர் எம்.நாச்சியப்பன் பேசிய ஆடியோ ஆர்ப்பாட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது. சோனாசல சுவாமி, மாவட்ட துணை தலைவர்கள் கே.சந்தோஷ், செந்தில்முருகன், கே.சந்தோஷ், அனுஜா, மாவட்ட செயலாளர்கள் பி.அருணாசலம், டி.சந்திரன், கே.அரிபபிரகாஷ்குமார், எம்.சங்கர், கே.வெங்கடாஜலபதி, சசிகுமார், பவன்குமார் மற்றும் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.காண்டீபன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில துணை தலைவர் டி.எஸ்.சங்கர் மாடவீதியை சுற்றி சிமெண்ட் சாலை போடப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், முடிந்தால் கேவியட் மனு தாக்கல் செய்து கொள்ளுங்கள் என  தெரிவித்தார்.(வீடியோ)

இந்நிலையில் நேற்று இரவு திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மாடவீதியில் சிமெண்ட் சாலை-சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூராதீனம் இருபத்தைந்தாம் குருமகாசந்நிதானங்களின் அருளாணையின் வண்ணம், சாந்தலிங்கர் நினைவு அறக்கட்டளையின் சார்பில் திருவண்ணாமலை அக்கினித் தீர்த்தக் குளத்தைப் பராமரித்து வந்த தவத்திரு சோணாசல அடிகளார் அவர்கள், அக்கினித் தீர்த்தக்குள விவகாரத்தில் பேரூராதீனக் கட்டளையை மீறிச் செயல்படுவதால் அவரைப் பேரூராதீனத் துறவி எனும் நிலையில் இருந்து விடுவிக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு, கட்டளைத் தம்பிரான் (குருமகாசந்நிதானங்களின் அருளாணையின் வண்ணம்)

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!