திருவண்ணாமலையில் முதன்முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி தனியார் அமைப்பு சார்பில் இன்று நடைபெற்றது. இதில் குத்தாட்டம், பரதநாட்டியம், சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் இடம் பெற்றன. ஆன்மீக ஊரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு என பாஜக விமர்சனம் செய்திருந்த நிலையில் இது கலாச்சார சீரழிவு நிகழ்ச்சி இல்லை என கலெக்டர் விளக்கமளித்தார்.
உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சென்னையில் கடந்த 2022ம் ஆண்டு ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று ஆடிப்பாடியும், வீர விளையாட்டுகளை செய்து காட்டியும், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டும் மகிழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி பல்வேறு ஊர்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. திருவண்ணாமலையில் முதன்முறையாக இந்த நிகழ்ச்சி இன்று காலை ஈசான்ய மைதானத்தில் தனியார் அமைப்பு மூலம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இளசுகள் குத்தாட்டம் போட்டனர். பலர் ஆடிபாடி மகிழ்ந்தனர். பரதநாட்டியம், சிலம்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
புனித பூமியில் கலாச்சார சீர்கேடு
ஆன்மீக நகரான திருவண்ணாமலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி நடத்துவதற்கு பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
அதில் அவர் விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் அண்ணாமலையார் கிரிவலம் வரும் பகுதியான காஞ்சி- வேலூர் கூட்டு ரோடு சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் எனக்கூடிய நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். அண்ணாமலையார் புனித பூமியில் கலாச்சார சீர்கேடு எதிராக எந்த ஒரு நிகழ்ச்சியும் மாவட்ட காவல் துறை அனுமதிக்க கூடாது. மாறாக மாவட்ட அமைச்சரும், செயல் அமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவருடைய மகன் வற்புறுத்தல் பேரிலோ, நிகழ்ச்சி நடக்குமானால் அந்த நிகழ்ச்சியை நடத்த விடமாட்டோம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஈசான்ய மைதானத்தில் நடைபெற்றது. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை கூறியது. ஆனால் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் கலெக்டர் கலந்து கொண்டிருக்கிறார். அவர் கலந்து கொண்டது அனுமதியின் பேரிலா? அல்லது அனுமதியை மீறியா? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என டி.எஸ்.சங்கர் இன்னொரு பதிவை வெளியிட்டிருந்தார்.
ஹேப்பி ஸ்ட்ரீட் கலாச்சார சீரழிவு நிகழ்ச்சி அல்ல என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது,
திருவண்ணாமலையில் பொழுதுபோக்கே இல்லை
இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சி நமது ஊரில் நடக்கிறது. ஹேப்பி ஸ்ட்ரீட் என்பது பாரம்பரிய உணவுகள், விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுவதாகும். திருவண்ணாமலை என்று எடுத்துக் கொண்டால் பொழுதுபோக்கே இருக்காது. இது கலாச்சார சீரழிவு கிடையாது.
மக்களின் மூளையை புத்துணர்ச்சி பெறுவதற்கான நிகழ்ச்சியாகும். இதை விடியற்காலையிலோ அல்லது மாலை நேரங்களிலோ நடத்தலாம். நம் மாவட்டத்தில் இது ஒரு துவக்கம் தான். சிலம்பாட்டம், பரதநாட்டியம், டேபிள் டென்னிஸ், கோலிகுண்டு என கிராமத்து விளையாட்டுகளை அந்தந்த இடங்களில் தெருக்களில் விளையாடுவார்கள். பிட்னஸ் பயிற்சிகள், ஸ்கேட்டிங் செய்வார்கள்.
இந்த மாதிரியான பாரம்பரிய விளையாட்டுகளையெல்லாம் இந்த கால மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடக்கிறது. மியூசிக், டான்ஸ் என இல்லாமல் நிறைய விளையாட்டுகள் உள்ளது. அடுத்த முறை தெருக்களில் நடத்துங்கள். நிகழ்ச்சி மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில், எதிர்மறை கருத்துக்கள் இல்லாத மாதிரி பார்த்து நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.