Homeசெய்திகள்லஞ்சமில்லை, ஏமாற்றி பழக்கமில்லை-எ.வ.வேலு ஆவேசம்

லஞ்சமில்லை, ஏமாற்றி பழக்கமில்லை-எ.வ.வேலு ஆவேசம்

லஞ்சம் வாங்குகிற ஜென்மம் என் ஜெனமம் அல்ல, சம்பாதிக்கின்ற பணத்தை மக்களுக்கு வழங்குபவன் நான் என்று அமைச்சர் எ.வ.வேலு ஆவேசமாக கூறினார்.

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி அய்யம்பாளையம், அடிஅண்ணாமலை, தேவனந்தல் ஆகிய ஊராட்சிகளில் பொது மக்களை நேரில் சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது,

செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். முதலமைச்சரின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

லஞ்சமில்லை, ஏமாற்றி பழக்கமில்லை-எ.வ.வேலு ஆவேசம்

ரூ.5 கோடியில் பணிகள்

திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் என்கிற அடிப்படையில் அய்யம்பாளையம் ஊராட்சியில் ரூ.1.20 கோடி, அடிஅண்ணாமலை ஊராட்சியில் ரூ.2.25 கோடி, தேவனந்தல் ஊராட்சியில் ரூ.1.58 கோடி என மொத்தம் ரூ.5.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை பெற்று தருதல், பட்டா, சிட்டா, நீர்தேக்கத்தொட்டி, கழிவறை, சிமெண்ட் சாலை, தெருவிளக்கு அமைத்து தருதல், மின் இணைப்பு, புதிய வீடுகட்டி தருதல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் காதொலிகருவி, 3 சக்கர சைக்கிள், ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்குவது குறித்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

See also  கலெக்டருக்கு¸ அய்யாக்கண்ணு 1வாரம் கெடு

ஊராட்சி மன்ற தலைவரும், ஒன்றிய குழு உறுப்பினரும் சிமெண்ட் சாலை வேண்டும், வடிகால் அமைத்து தர வேண்டும், சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும் என மனு அளித்திருக்கின்றனர். இம்மனுக்கள் மீது அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பொய் சொல்ல முடியாது

ஒரு சிலர் பட்டா வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். பட்டா வழங்குவதில் சிக்கல் இருக்கிறது, நான் உங்கள் தொகுதி எம்எல்ஏ, பொய் சொல்லி விட்டு போய்விட முடியாது. உங்களோடு நான் வாழ்ந்து கொண்டிருப்பவன். ஏற்கனவே அரசு ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. நகரத்தை சுற்றி 8 கிலோ மீட்டர் தூரத்திற்குள் பட்டா கொடுக்கக் கூடாது என்று. அந்த ஆணையை ரத்து செய்தால் தான் பட்டா வழங்க முடியும். அந்த ஆணையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நான் குடும்பம் இருக்கிற தென்மாத்தூரிலேயே பட்டா கொடுக்க முடியாத நிலை.

கல்குவாரி குறித்து மனு அளித்திருக்கிறீர்கள். உங்களுக்கே தெரியும். ஏதோ அமைச்சரிடம் கொடுத்து பார்க்கலாமென்று கொடுத்திருக்கிறீர்கள். இது சம்பந்தமாக பழைய தலைவர்கள் எல்லாம் என்னிடத்தில் கோரிக்கை வைத்தார்கள். நான் கலெக்டரிடம் கலந்து ஆலோசித்தேன். கலெக்டரும் சென்னையில் உள்ள கனிமவளத்துறை அதிகாரியிடம் பேசினார்.

See also  சூர்யா¸ ஜோதிகாவை கைது செய்ய போலீசில் பா.ம.க புகார்

ஏரியில் இருந்து 500 மீட்டர் தள்ளி இருந்தால் தான் குவாரிக்கு டெண்டர் விட முடியும். அதுவும் குறிப்பிட்ட ஆழம் வரை தான் தோன்ட முடியும். அதற்கு மேல் எடுத்தால் வழக்கு போடுவோம் என்று கனிமவளத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள். அடிஅண்ணாமலை குவாரி, ஏரியிலிருந்து 500 மீட்டருக்குள் வருவதால் டெண்டர் விடுவதற்கு வாய்ப்பில்லை என்றும் சொல்லி விட்டார்கள்.

ஏமாற்றி பழக்கமில்லை

மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை நான் ஓப்பனாக சொல்ல முடியாது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறேன். என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டேன். சட்டம் இடம் தரவில்லை. சட்டம் எப்போது இடம் தருமோ அப்போதுதான் அதை நடைமுறை படுத்த முடியும்.

லஞ்சமில்லை, ஏமாற்றி பழக்கமில்லை-எ.வ.வேலு ஆவேசம்

100க்கும் மேற்பட்டோர் இந்த தொழிலை செய்து வருகிறோம். அடுத்தது நாங்கள் என்ன செய்வது என்று கேட்கிறார்கள். நீங்களே ஏதாவது தொழிலை சொல்லுங்கள், நான் வங்கி கடனுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். நடக்காத ஒரு காரியத்தை நடக்கும், நடக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் நான் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று பொருள்.

எனக்கு ஏமாற்றி பழக்கமில்லை. நான் செய்து தருகிறேன் என்று வழியில் போறவர்கள் யாராவது சொல்லலாம். என்னால் செய்ய முடியாதது, எந்த காலத்திலும் யாராலும் செய்ய முடியாது. மக்களுடைய மனதை புரிந்து கொண்டு உதவி செய்யணும் என்று நினைக்கிறவன்.

10 பைசா கூட லஞ்சம் வாங்க மாட்டேன். லஞ்சம் வாங்கக்கூடிய ஜென்மம் இல்லை என் ஜென்மம். அப்படிப்பட்டவன் நான். நான் சம்பாதிக்கிற பணத்தை நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று நினைப்பவன். குவாரிக்கு அனுமதி கொடுத்தால் நாங்கள்தான் ஜெயிலுக்கு போக வேண்டியதிருக்கும் என அதிகாரிகள் சொல்லுகின்றனர். எனவே ஏற்கனவே எப்படி இருந்தீர்களோ அப்படி இருந்து கொள்ளுங்கள். அல்லது புது தொழிலுக்கு வாருங்கள்.

See also  பள்ளி திறப்பை விநாயகர் சதுர்த்தியை ஒப்பிடாதீர்கள்

இங்கு ஓடைகள் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பதாக மனு அளித்துள்ளனர் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற சொல்லி கோட்டாட்சியரிடம் தெரிவித்து இருக்கிறேன்

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ்.சிவா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், ஒன்றியக்குழு துணை தலைவர் த.ரமணன், ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட கவுன்சிலர் இல.சரவணன், நகரமன்ற துணைத்தலைவர் ராஜாங்கம் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மெ.பிரித்திவிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ச.அருணாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுபாசெல்வமணி, வி.சாந்தி விஜயன், ஊராட்சி மன்ற தலைவர்கள் எம்.பிரியதர்ஷினி, மகேந்திரன், ஏ.நவநீதம் ஆறுமுகம், கோ.ரமேஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் ஜெ.ராமஜெயம், து.சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் திருவண்ணாமலை தாசில்தார் எஸ்.சரளா நன்றி கூறினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!