Homeசெய்திகள்நகராட்சி கடை வேண்டாம்-பூ வியாபாரிகள் அதிரடி முடிவு

நகராட்சி கடை வேண்டாம்-பூ வியாபாரிகள் அதிரடி முடிவு

திருவண்ணாமலை ஜோதி மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்யும் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகையை கட்ட சொல்லி அதிகாரிகள் கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையை எடுத்து வருவதால் நகராட்சி கடைகளை விட்டு வெளியேறும் முடிவில் பூ வியாபாரிகள் உள்ளனர்.

திருவண்ணாமலை தேரடித் தெருவில் பூ மார்க்கெட் இயங்கி வரும் ஜோதி மார்க்கெட்டில் மட்டும் 130 கடைகள் உள்ளன. இங்குள்ள கடைதாரர்களிடமிருந்து சுமார் ரூ.5 கோடிக்கு மேல் வாடகை பாக்கி வர வேண்டியது உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

200 மடங்கு வரை வாடகை உயர்த்தப்பட்டதால் வாடகையை குறைக்க நாங்கள் வைத்த கோரிக்கை பல வருடங்களாக நிலுவையில் இருப்பதாகவும், தரை வாடகையை ரூ.800லிருந்து ரூ.8 ஆயிரமாகவும், கடைகளுக்கு ரூ.1200லிருந்து ரூ.12ஆயிரமாகவும் உயர்த்தப்பட்ட நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தரை வாடகையை ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாகவும், கடை வாடகையை ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.22 ஆயிரமாகவும் உயர்த்தியிருப்பதாகவும், வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது பற்றி அமைச்சர் எ.வ.வேலுவிடம் முறையிட்ட போது 50 சதவீத வாடகையை கட்ட ஏற்பாடு செய்தார். கிராமங்களில் இருந்து வரும் வியாபாரிகள் தினமும் வாடகைக்கே ரூ.750 வரை செலுத்தினால் எங்களால் எப்படி தொழில் செய்ய முடியும்? தமிழக அரசு வாடகையை குறைக்க அமைத்துள்ள குழு எந்தவித முடிவையும் அறிவிக்காமல் உள்ளது என வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

ஜோதி மார்க்கெட்டில் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க சென்ற போது அவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் அதிகாரிகளை கண்டித்து பூக்களை ரோட்டில் கொட்டி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

வியாரிகளின் எதிர்ப்பால் கடந்த ஜூலை மாதம் நள்ளிரவு நேரத்தில் சென்று கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடை உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும், கடையை ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. நகரமன்ற தலைவரிடம் வியாபாரிகள் முறையிட்டதால் சீல் அகற்றப்பட்டது.

அதிகாரிகள் – வியாபாரிகள் கடும் வாக்குவாதம்

வீடியோ

இந்நிலையில் நேற்று போலீஸ் படையுடன் ஜோதி மார்க்கெட்டுக்கு சென்று நகராட்சி அதிகாரிகள் சில கடைகளுக்கு சீல் வைத்தனர். இதில் குறைந்த வாடகை பாக்கி உள்ள வியாபாரிகள் சங்க முக்கிய நிர்வாகியின் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. பிறகு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தவணை முறையில் பணம் கட்ட வியாபாரிகள் ஒத்துக் கொண்டதால் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

இது பற்றி பூ வியாபாரிகள் தெரிவிக்கையில் நகராட்சி அதிகாரிகள் தொழிலை நசுக்கிய காரணத்தால் காஞ்சிபுரத்தில் பூ வியாபாரிகள் நகராட்சி கடைகளை காலி செய்து விட்டு தனியார் இடத்தை விலைக்கு வாங்கி அதில் கடைகளை கட்டி வியாபாரம் செய்து வருகின்றனர். அதே போல் நகராட்சி கடைகளை காலி செய்யும் முடிவை எடுக்க வேண்டிய நிலையில் திருவண்ணாமலை வியாபாரிகள் இருக்கின்றோம். திண்டிவனம் பைபாஸ் ரோட்டில் சுமார் 3.5 ஏக்கர் நிலத்தை பூ வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சிலர் சேர்ந்த வாங்கி கடைகள் கட்டி வாடகை விட உள்ளனர். இதனால் ஒரு நாளைக்கு 100 ரூபாய் என்றாலே மாதம் 3000 ரூபாய்தான் வாடகைக்கு கொடுக்க வேண்டியதிருக்கும் என்றனர்.

திருவண்ணாமலை காந்தி நகரில் ரூ.29 கோடியில் ஒருங்கிணைந்த பூ மற்றும் காய்கறி மார்க்கெட் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


https://youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!