திருவண்ணாமலையில் குன்றக்குடி ஆதீனத்தின் மகாகுருபூஜை விழா நடைபெற்றது. இதில் பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது அடியார்களுக்கு ஆதார் கார்டு தேவையில்லை என்றார்.
குன்றக்குடி ஆதீன குருபூஜை
திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் குன்றக்குடி ஆதீனத்தின் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குன்றக்குடி ஆதீனம் தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளின் 698ம் ஆண்டு மகா குருபூஜை விழா நடந்தது.
விழாவையட்டி காலை 10 மணியளவில் திருவண்ணாமலை வேட்டவலம் ரோட்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குருமூர்த்தி திருவுருவப்படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலம் வேட்டவலம் சாலையில் உள்ள குருமூர்த்தத் திருக்கோயிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
நிகழ்ச்சிக்கு சேஷாத்திரி ஆசிரமத்தின் நிர்வாகி லாயர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். ஆசிரம நிர்வாகிகள் ஆ.பாலமுருகன், வழக்கறிஞர் எஸ்.ஆர்.வி. பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
அவர் பேசியதாவது,
அடியார்கள் என்பவர்கள் யார்?
அடியார்களுக்கு ஆதார் கார்டு வேண்டாம், அஞ்சலக முகவரி வேண்டாம், அவர்களுக்கு இருக்கிற ஒரே முகவரி அன்பின் முகவரி. நன்மையும், தீமையும் அவர்களுக்கு ஒன்றுதான். வாழ்வும், தாழ்வும் ஒன்றுதான். ஏற்றமும், இறக்கமும் ஒன்றுதான். ஓடும், மண்ணும், தங்கமும் ஒன்றுதான். சொர்க்கம் கிடைத்தால் கூட வேண்டாம் என்று சொல்வார்கள் அவர்கள் தான் அடியார்கள். அந்த அடியார் தான் திருவண்ணாமலை ஆதீனத்தை தோற்றுவித்தகுரு மகா சன்னிதானம்.
அப்படி வாழ்ந்ததால் தான் அவர்களால் நிறைய சமூகப் பணி மக்கள் பணி செய்ய முடிந்தது. கடவுளை ஏமாற்றினால் மருந்துக்கு தான் பணம் செலவாகும். உலகத்தில் யார் யாரை ஏமாற்ற நினைத்தாலும் அவர்கள் ஏமாந்து போவார்கள். கடவுளை மட்டுமல்ல சகல மனிதர்களையும் யாரெல்லாம் ஏமாற்றுகிறார்களோ அவர்கள் தான் ஏமாந்து போவார்கள்.நாம் என்ன செய்கிறோமோ அது தான் வந்து சேரும். எனவே நன்மையே செய்ய வேண்டும்.
விண்வெளி துறையில் ஒரு பெரிய அற்புதத்தை படைத்தோம். சாதனைக்கு காரணமான விழுப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் வீரமுத்துவேல் ஒரு சராசரி மாணவர்தான். அன்றைய பாடத்தை அன்றைய தினமே படிப்பேன். அதன் விளைவு ஆய்வுக் கூடத்தில் பணி கிடைத்தது. இந்த பணியையும் நான் முழு ஆர்வத்தோடு செய்தேன். சராசரி வீரமுத்துவேலால் செய்ய முடியும் என்றால் சாதிக்க முடியும் என்றால் உங்களாலும் சாதிக்க முடியும் என அவர் சொல்லியிருக்கிறார்.
யாரும் யாருக்கும் உயரமானவர்கள் அல்ல, யாரும், யாருக்கும் கீழானவர்கள் அல்ல. அதுதான் நாட்டின் கூட்டுறவு தத்துவம். அதைத்தான் மகா சன்னிதானம் ஆன்மீக தளத்தில் எடுத்துச் சென்றார்கள். சன்னிதானங்கள் அனைவரும் தங்கள் ஆசனம் உயரத்தில் தான் தங்களது பெருமை இருக்கிறது என்று நினைத்தபோது மக்கள் மனதில் இருப்பது தான் உண்மையான ஆன்மீகம் என்பதை நிரூபித்து காட்டியவர் குன்றக்குடி அடிகள் பெருமான்.
இவ்வாறு பொன்னம்பல அடிகளார் பேசினார்.
நிகழ்ச்சியில் மக்கள் கல்வி நிலைய தலைவர் நாச்சிமுத்து, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜெயச்சந்திரன், ஆதீன பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கருப்பையா, சண்முக சுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குமார், பாஸ்கரன், கவிஞர் ஆ.தே. முருகையன், திருக்குறள் குப்பன், மு.சீனிவாசன், கி.சரவணகுமார், துவாரகநாத் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.