திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
திருவண்ணாமலை அருகே உள்ள வேங்கிக்கால் வேகமாக வளர்ந்து வரும் ஊராட்சியாக உள்ளது. இங்கு 2011ல் 8ஆயிரத்து 691 ஆக இருந்த மக்கள் தொகை இப்போது 25 ஆயிரத்தையும் தாண்டி விட்டது. கலெக்டர், எஸ்.பி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலங்கள் உள்ள பகுதியாக வேங்கிக்கால் ஊராட்சி திகழ்ந்து வருகிறது.
12 வார்டுகளைக் கொண்ட வேங்கிக்கால் ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த சாந்தி தமிழ்ச்செல்வன் ஊராட்சி மன்ற தலைவராகவும், துணைத்தலைவராக அதிமுகவை சேர்ந்த பாலா மூர்த்தி என்பவரும் உள்ளனர். இந்நிலையில் இவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
இதற்கு ஐகோர்ட்டில் பாலா மூர்த்தி தடை உத்தரவு பெற்றார். இதனை எதிர்த்து மன்ற உறுப்பினர்களின் துணையோடு தலைவர் சாந்தி தமிழ்செல்வன் மீண்டும் ஐகோர்ட்டை நாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, தாசில்தார் தலைமையில் கூட்டம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
அதன்பேரில் இன்று திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தாசில்தார் சரளா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் த.சாந்திதமிழ்செல்வனை தவிர்த்து துணை தலைவர் பாலாமூர்த்தி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சி.லதா, கே.சுரேஷ், எம்.அமுதா, எஸ்.வசந்தி, கே.பூபாலன், கே.ரவி, எஸ்.அமுதா, எல்.லிங்கசாரதி, தி.சற்குணராஜபாண்டியன், எஸ்.மஞ்சு, எம்.பானுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். பூட்டிய அறைக்குள் சுமார் 1 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் துணை தலைவர் பாலாமூர்த்தி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதை ஆதரித்து 11 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து பாலாமூர்த்தியை துணை தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து தாசில்தார் எஸ்.சரளா கூறுகையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
இதன் மூலம் வேங்கிக்கால் ஊராட்சியில் அதிமுகவிற்கு பலம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.