திருவண்ணாமலை அடுத்த தெள்ளானந்தல் கிராமத்தில் ரூ.3 கோடியே 20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு மையம் கட்டடத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி தெள்ளானந்தலில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் மற்றும் கம்பன் வருகைக்காக சுமார் 1 மணி நேரம் காத்திருந்தார் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி.
திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் வள்ளிவாகை ஊராட்சிக்குட்பட்ட தெள்ளானந்தல் கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை, திருவண்ணாமலை விற்பனைக்குழு மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.ரூ.3 கோடியே 20 லட்சத்தில் மதிப்பீட்டில் சமையல் எண்ணெய் சந்தைபடுத்தும் ஊக்குவிப்பு மையம் மற்றும் நவீன சிப்பம் கட்டும் அலகு கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது.
சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவீன சிப்பம் கட்டும் அலகு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதையொட்டி அந்த மையத்தை குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி காலை 10-30 மணிக்கு வருகை தந்தார். அவரும், கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பெ.சு.தி.சரவணனும் கலெக்டர் வருகைக்காக எண்ணெய் தயாரிப்பு மையத்தின் முன் காத்திருந்தனர். 30 நிமிடம் பொறுத்து கலெக்டர் முருகேஷ் அங்கு வருகை தந்தார். இதனால் திறப்பு விழாவிற்காக பிச்சாண்டி, மையத்தின் உள்ளே வந்தார்.
அப்போது விழாவிற்கு அமைச்சர் எ.வ.வேலுவின் மகனும், மாநில தடகள சங்க துணைத் தலைவருமான எ.வ.வே.கம்பன் வருகிறார் என பிச்சாண்டியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே மீண்டும் மையத்தின் வெளியே கலெக்டருடன் அவர் காத்திருந்தார். 30 நிமிடம் கழித்து கம்பன் வந்ததும் விழா தொடங்கியது.
வேளாண் இணை இயக்குநர் சி.அரக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
மையத்தை ரிப்பன் கத்திரித்தும், குத்துவிளக்கேற்றியும் துவக்கி வைத்த துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசியதாவது,
மணிலா உற்பத்தியில் இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக நமது மாவட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மணிலாவின் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக அதாவது எண்ணெய்யாக மாற்றி விற்பனை செய்தால் அதிக லாபம் ஈட்டுவதற்காக விவாசயிகள் விவசாயிகள் கூட்டுறவாக இணைந்து செயல்பட இந்த ஆலை துவக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயனடைவார்கள். விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாய சங்கங்கள் அரசு சார்பாக மணிலா ஆலை திறக்கப்பட்டுள்ளதை துண்டு பிரசுரம் அச்சடித்து பொது மக்களிடையே விளம்பரம் செய்தால் தான் நல்ல பலன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு மான்யத்தில் 329 பவர்டில்லர் மற்றும் கலை எடுக்கும் இயந்திரங்களை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
விழாவில் அரசு அலுவலர்கள் விவசாய பிரதிநிதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் வள்ளிவாகை ஊராட்சி மன்ற தலைவர் சசிகலாகுமார் நன்றி கூறினார்.
செய்தி, கட்டுரை, புகைப்படங்களை அனுப்ப…