திருவண்ணாமலை மதுவிலக்கு போலீசார் நடத்திய வேட்டையில் எரிசாராய கடத்தலுக்கு பயன்படுத்திய ஆடி கார், லாரி மற்றும் 7,200 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை கிராமத்தில் சாராய வேட்டையை நடத்தினர்.
அப்போது அங்கு மலையடிவாரத்தில் உள்ள தனி வீட்டில் இருந்த செஞ்சியை அடுத்த மானந்தல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(45) என்பவரை விசாரித்ததில் எரிசாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து அவர் கொடுத்த தகவலின் பேரில் வள்ளிவாகையில் மாசிலாமணி என்பவரது வீட்டில் இருந்த 137 கேன்களில் இருந்த 4.795 லிட்டர் ஏரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
தலைமறைவான மாசிலாமணி (50) என்பவரை தேடி வந்தனர். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் பல லட்சம் மதிப்பிலான எரி சாராயம் கடத்தி வரப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆரணி களம்பூர் பகுதியிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வேகமாக வந்த ஆடி காரை நிறுத்தி விசாரித்தனர். அநத காரில் பதிவெண் இல்லாததை பார்த்து சந்தேகம் அடைந்து காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த கார் மற்றும் பின்னால் வந்த டாடா சுமோ, கண்டெய்னர் லாரி ஆகியவற்றில் 220 எரி சாராயம் உள்ள கேன்கள் இருந்ததை கண்டுபிடித்து அவைகளை பறிமுதல் செய்தனர்.
சொகுசு காரில் எரிசாராயம் கடத்தி வந்தால் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கலாம் என நினைத்து அவர்கள் ஆடி கார், சுமோ, லாரியில் எரிசாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையொட்டி செய்யாறு பகுதியைச் சேர்ந்த சந்துரு, மாரி, விஜயராஜ், களம்பூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன், செஞ்சி தாலுகாவை சேர்ந்த வெங்கடேசன், திருவண்ணாமலை சேர்ந்த திருமலை, மோகன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மத்திய பிரதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும், ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்து இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் யாருடையது? திருடப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.