திருவண்ணாமலையில் நடைபெற்ற பாஜக போராட்டத்தின் போது தடுப்புகளை தள்ளி விட்டு இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட பாஜகவினர் முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து இந்த மாநாட்டில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 10ந் தேதிக்குள் பதவி விலகவில்லை என்றால் 11ந் தேதி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக பாஜக அறிவித்திருந்தது. மேலும் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட கோரியும், இந்த மாநாட்டில் பங்கேற்ற சேகர்பாபுவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க கோரியும் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக அறிவித்தபடி திருவண்ணாமலையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. திருவூடல் தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட பாஜகவினர் திரண்டனர். அவர்கள் அந்த அலுவலகத்திற்கு செல்லாத வண்ணம், போலீசார் கற்பக விநாயகர் கோயில் அருகே ரோட்டில் பேரிகார்டு மூலம் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.
திருவூடல் தெரு மேட்டில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் பாஜக மாநில செயலாளர் கோ.வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் பிறப்பால் அனைவரும் சமம் என்பது தான் சனாதன தர்மம். இப்படி நமது நாட்டில் உருவான ஒரு உயர்ந்த தர்மத்தை ஒழிப்பேன் என்று உதயநிதி பேசிய மேடையில் இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு என்ன வேலை?
கோயில் நகை உருக்கப்படும் என சொன்னதற்கு பொறுத்துகிட்டோம். உண்டியல் பணத்தை எடுத்து இன்னவோ கார் வாங்கியதற்கு பொறுத்துகிட்டோம். இந்து கோயிலை புனரமைக்க 1000 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என சொல்லி விட்டு இரண்டரை ஆண்டில் செலவு செய்தது வெறும் 55 கோடி ரூபாய் மட்டுமே. அதையும் பொறுத்துகிட்டு இருந்து வருகிறோம். இப்போது இந்து தர்மத்தை ஒழிப்போம் என்று பேசியுள்ளீர்கள். இதற்கு மேலும் நாங்கள் பொறுத்திருக்க முடியாது. என்றார்.
இதையடுத்து திமுக அரசுக்கு எதிராகவும், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. பிறகு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் அலுவலகத்தை நோக்கி செல்ல பாஜகவினர் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். தடுப்புகளை அகற்றி விட்டு முன்னேற பாஜவினர் முயன்ற போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ…
இதைத் தொடர்ந்து மாநில செயலாளர் கோ. வெங்கடேசன், தெற்கு மாவட்ட தலைவர் ஆர். பாலசுப்பிரமணியன், மாவட்ட பார்வையாளர் தசரதன், கோட்ட செயலாளர் குணசேகரன், முன்னாள் மாவட்ட தலைவர் நேரு, மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ், மாவட்ட துணை தலைவர்கள் டி. சிவசங்கரன், கவிதா, அருணை ஆனந்தன், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், நகரத் தலைவர் மூவேந்தன் உள்பட 338 பேர் கைது செய்யப்பட்டனர்.
தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாஜகவினர் இரவு 9 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.