திருவண்ணாமலையில் திருவள்ளுவர் சிலை திடீரென அகற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் காமராஜர், காந்தி, அண்ணா, பெரியார், அம்பேத்கர் சிலைகள் இருந்து வருகின்றன. திமுக அரசு பொறுப்பேற்றதும் கலைஞர் சிலை போளுர் ரோடு அண்ணா நுழைவு வாயில் அருகில் நிறுவப்பட்டது.
இதற்கிடையில் திருவண்ணாமலை வேட்டவலம் ரோடு, திருக்கோயிலூர் ரோடு சந்திப்பில் 1998ம் ஆண்டு திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. அப்போது வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த கு.பிச்சாண்டி இந்த சிலையை திறந்து வைத்தார். இதன் மூலம் திருவண்ணாமலையில் தெய்வபுலவரான திருவள்ளுவருக்கு சிலை இல்லாத குறை போக்கப்பட்டது.
பீடத்தோடு சேர்ந்து சுமார் 20 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டிருந்தது. வருடந்தோறும் தை மாதம் மாட்டு பொங்கல் அன்று வரும் திருவள்ளுவர் தினத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.
திருவண்ணாமலை வேட்டவலம் ரோட்டில் திருக்குறள் நெறி பரப்பும் மையத்தின் நிறுவனர் கேப்டன் சாமிநாதன் இந்த சிலையை பராமரித்து வந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தார் திருவள்ளுவர் சிலை முன்பு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர்.
தற்போது வேட்டவலம் ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதே போன்று திருக்கோயிலூர் ரோடும் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. ரோடு அகலப்படுத்தும் பணி முடிவடைந்த பிறகு வேட்டவலம் ரோடு-திருக்கோயிலூர் ரோடு சந்திப்பில் ரவுண்டனா அமைக்கவும், அதன் நடுவே திருவள்ளுவர் சிலை அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை திருவள்ளுவர் சிலையை அகற்றும் பணி தொடங்கியது. சிலை அகற்றி எடுத்துச் செல்லப்பட்டதும், ஜே.சி.பி இயந்திரம் மூலம் பீடம் இடித்து தள்ளப்பட்டது. இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் விசாரித்ததில் சிலை அகற்றப்பட்டதற்கும், எங்களுக்கும் சம்மந்தமில்லை என்றனர். நகராட்சி மூலம் சிலை அகற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து சாமிநாதனின் மருமகன் கமலக்கண்ணன் கூறுகையில், சிலையை அகற்றப் போகிறோம் என திமுக தரப்பில் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. திடீரென இன்று சிலை அகற்றப்பட்டது. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதற்காக சிலையை அகற்றுகிறோம் என தெளிவாக சொல்லவில்லை. யாருக்கும் இடைஞ்சல் இன்றி ரோட்டின் ஓரமாக சிலை இருந்தது. இப்போது இன்னும் ஓரமாக வைக்கப் போவதாக சொல்கின்றனர். ரவுண்டனா அமைக்கப்பட்டால் அதன் நடுவே இந்த சிலையை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.
கேப்டன் சாமிநாதன் எழுதிய புத்தகத்திலிருந்து…
” திருவண்ணாமலையில் திருவள்ளுவருக்கு சிலை எழுப்ப வேண்டும் என்று பல்லாண்டுகளுக்கு முன் 1947ல் படையில் சேரும் போதே எண்ணிய எண்ணம் 1977ல் ஓய்வு பெற்று வந்த போது சொல்லாகி எல்லோரிடமும் சொல்லியும் 1988 செயலுருவம் கொடுத்து முன்னாள் ஆட்சியர் சி.எஸ்.இராசமோகன், I.A.S. அவர்கள் ஆட்சிகாலத்தில் திருவள்ளுவர் சிலை அமைப்புகுழு ஏற்படுத்தி பொருள் சேகரிக்க டாக்டர். து. சுப்பராயன் அவர்கள் Ex M.P., S.முருகையன் மற்றும் அருளுள்ளம் கொண்டவர்களுடைய ஒத்துழைப்புடன் திருவள்ளுவர் சிலை வெங்கலத்தால் செய்து கொண்டு வந்து அனுமதிக்காக காத்திருந்து அனுமதியும் பெற்று 31.8.98ல் திருவள்ளுவர் சாலை திருவள்ளுவர் சதுக்கத்தில் அமரச் செய்து அனைத்து பணிகளையும் ஏறத்தாழ ரூ.3லட்சத்தில் செவ்வன செய்து முடித்து திருவள்ளுவராண்டு 2029 மேழம் (சித்திரை) முதல் நாள் 14.4.98 அன்று அடிதளமக்கள் முதல் ஆன்றோர் சான்றோர் அனைவரும் கூடி திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மிகச் சிறப்பாக ஆட்சியர் சிவ.சூரியன் தலைமையில் மாண்புமிகு அமைச்சர் கு.பிச்சாண்டி, M.A., அவர்கள் திறந்து வைத்தார். ஆயிரமாயிரம் மக்கள் கூடியிருக்க ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு’. என்று திருக்குறார் நெறிபரப்புநர் கேப்டன். த.சாமிநாதன் மொழிய ’50 ஆண்டுகால உங்கள் நினைவு நிறைவேறியதில் மகிழ்கின்றோம்’ என் அனைவரும் வாழ்த்தினர்.”