திருவண்ணாமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அய்யம்பாளையம் புதூர் அருகே உள்ள பாழுங்கிணற்றில் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கத்தியால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது தெரிய வந்தது. இது சம்மந்தமாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்த விவரம் வருமாறு,
திருவண்ணாமலை வ. உ.சி நகர் 10வது தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 25). திருமணமாகாதவர். இவரது நண்பர் அருண். பேகோபுரம் பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் டைல்ஸ் பதிக்கும் வேலையை செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 10ந் தேதி வேலைக்கு சென்ற விஜய் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த மாதம் 21ந் தேதி அவரது தாயார் ஜானகி, திருவண்ணாமலை நகர போலீசில் மகனை காணவில்லை என புகார் கொடுத்தார். போலீசார் விஜய்யை தேடி வந்தனர்.
விஜய் காணாமல் போன அன்று கடைசியாக அருணுடன் பேசியுள்ளதை அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து அருணை பிடித்து விசாரித்ததில் விஜய்யை கத்தியால் குத்தி திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் புதூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை எதிரே உள்ள சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருக்கும் பாழடைந்த கிணற்றில் உடலை வீசி விட்டு சென்றது தெரிய வந்தது.
விஜய் தன்னிடம் ரூ.10 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார் என்றும், சம்பவத்தன்று அய்யம்பாளையம் புதூர் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி குடித்த போது இந்த பணத்தை கேட்டதாகவும், அதற்கு விஜய் கொடுக்க மறுத்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்து விஜய்யை கத்தியால் குத்தி, கிணற்றில் வீசி விட்டதாகவும் போலீசில் அருண் கூறியிருப்பதாக தெரிகிறது.
இதையடுத்து போலீசார், தீயணைப்பு துறை உதவியுடன் அந்த கிணற்றில் உடலை தேடினர். அப்போது வயிற்று கீழே பாதி உடல் எலும்பு கூடாக கிடைத்தது. சுமார் 25 நாட்களாக கிணற்றில் இருந்ததால் உடலை பூச்சிகள் கடித்து குதறி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. கட்டிலில் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறக்கி எலும்பு கூடாக இருந்த பாதி உடல் வெளியே எடுத்து வரப்பட்டது. கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றிய பிறகு மீதி உடலை கண்டெடுக்கும் பணி நடைபெறும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட எலும்பு கூட்டினை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது குடிக்க அழைத்துச் சென்று நண்பனை தீர்த்துக் கட்டி கிணற்றில் வீசி விட்டு 25 நாட்களாக எதுவும் தெரியாதது போல் அருண் நடமாடி உள்ளார். இச்சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.