திருவண்ணாமலையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்த ரூ.120 கோடி மதிப்பிலான இடத்தை அதிகாரிகள் இன்று அதிரடியாக மீட்டனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பட்டாவை காட்டினால் வேலையை ராஜினாமா செய்கிறேன் என அதிகாரி ஒருவர் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மணலூர்பேட்டை ரோடு சண்முகா தொழிற்சாலை கல்லூரிக்கு அருகில் வருவாய் துறைக்கு சொந்தமான 8.50 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 3 ஏக்கர் இடம் நீர்நிலை பகுதியாகும். இந்த இடம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக சிலரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.120 கோடி ஆகும்.
இந்நிலையில் கோர்ட்டு உத்தரவின் படி இந்த இடத்தை வருவாய்த் துறையினர் அதிரடியாக இன்று மீட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி, வட்டாட்சியர் சரளா ஆகியோர் மேற்பார்வையில் 8.50 ஏக்கர் நிலத்தில் இருந்த முட்களையும், புதர்களையும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஊழியர்கள் அகற்றினர்.
அதன்பிறகு அங்கிருந்த தாசில்தார் சரளா உள்ளிட்ட அலுவலர்களிடம் அங்கு வந்த சிலர் இந்த இடத்தை 13 தலைமுறையாக கட்டிக்காத்து வருவதாகவும், அதிகாரிகள் பட்டாவை ரத்து செய்துள்ளனர் என்றும், இது சம்மந்தமாக கோர்ட்டு தீர்ப்பு இருப்பதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஐகோர்ட்டில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும், 1920லிருந்து அந்த இடம் அரசு இடமாகத்தான் இருந்திருக்கிறது என பதிலளித்த மண்டல துணை தாசில்தார் சிவலிங்கம், உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் முறையிடுங்கள், பட்டாவை காட்டினால் என் வேலையை ராஜினாமா செய்கிறேன் என ஆவேசமாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தங்களிடம் உள்ள ஆதாரங்களை கொண்டு கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்வோம், நீங்கள்(அதிகாரிகள்) இடத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள் என கூறி விட்டு ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 120 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். கார்த்திகை தீபத் திருவிழா வருவதால் இந்த இடம் வாகன நிறுத்தும் இடத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்த அதிகாரிகள் எதிர்காலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த இடத்தில் கட்டிடங்கள் கட்ட வாய்ப்பு இருப்பதாகவும் கூறினர்.