பாதாள சாக்கடையில் சிமெண்ட் கலவை பூசப்படாததை கண்டுபிடித்த கலெக்டர் இந்த பணியை சரிவர செய்த பிறகே ஒப்பந்ததாரருக்கு பில் தர வேண்டும் என நகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாடவீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை திருவூடல் தெரு சந்திப்பிலிருந்து காந்தி சிலை வரை 1000 மீட்டர் அளவில் நவீன இயந்திரங்களை கொண்டு நெடுஞ்சாலை துறையின் மூலம் புதியதாக சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி 2022 ஆம் ஆண்டு மே மாதம் 8ந் தேதி தொடங்கியது.
மின் பகிர்மான கழகம் சார்பில் பூமிக்கு அடியில் மின் வடம் பதித்தல் பணிகள், நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை புதுப்பித்தல் ஆகிய பணிகள் அனைத்தும் முழுஅளவில் முடியும் தருவாயில் உள்ளது.
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பேவர் பிளாக் என்ற நவீன இயந்திரம் உத்திரபிரதேசத்திலிருந்து வரவழைக்கப்பட்டு சிமெண்ட் ரோடு போடப்பட்டது. இதனால் பணிகள் வேகமாக நடைபெற்று இப்பணியும் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
ஒப்பந்ததாருக்கு பில் தராதீங்க
இந்த பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் நிறைவு பெற்று சாலையை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என ஆய்வின் போது அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பூத நாராயணன் கோயில் அருகில் பாதாள சாக்கடை புதுப்பிக்கும் பணி சரிவர நடைபெறாததை கண்டுபிடித்த கலெக்டர் முருகேஷ், சிமெண்ட் கலவையை அடியிலிருந்து பூசாதது ஏன்? என ஒப்பந்ததாரரிடம் கேள்வி எழுப்பினார். மூடப்பட்ட பாதாள சாக்கடை குழியை திறந்து சிமெண்ட் சரியாக பூசப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்யும்படியும், இதை கூட கவனிக்காமல் எப்படி இருந்தீர்கள் என அந்த பணி அலுவலரை கடிந்து கொண்ட கலெக்டர், ஒப்பந்ததாரருக்கு பில்லை தராதீங்க, இந்த பணியை சரிவர முடித்த பிறகுதான் வழங்க வேண்டும் என நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
மேலும் காந்தி சிலையை பார்வையிட்டு அதை தள்ளி வைப்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்
அப்போது கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி, நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப்பொறியாளர் ரகுராமன், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.