திருவண்ணாமலையில் உள்ள பழைய அரசு மருத்துமனை வளாகத்தில் பல்நோக்கு மருத்துமனை 20 ஆயிரம் சதுர அடியில் 6 தளங்கள் கொண்டு அமைய உள்ளது. இதற்கான இடத்தை அமைச்சர் எ.வ.வேலு தேர்வு செய்தார்.
இதய நோய் மருத்துவம், இதய அறுவைச் சிகிச்சை பிரிவு, நரம்பியல் நோய் மருத்துவம், நரம்பியல் அறுவைச் சிகிச்சை பிரிவு, இறப்பை குடவியல் நோய் மருத்துவம், இறப்பை அறுவைச் சிகிச்சை பிரிவு, சிறுநீரக நோய் மருத்துவம், சிறுநீரக அறுவைச் சிகிச்சை பிரிவு, புற்றுநோய் மருத்துவம், புற்றுநோய் அறுவைச் சிகிச்சை, தோல் நோய் மருத்துவம், இரத்தக் குழாய் அறுவைச் சிகிச்சை பிரிவு, ஒட்டு உறுப்பு அறுவைச் சிகிச்சை பிரிவு, சுவாச மருத்துவம், விழித்திரை மற்றும் விழித்திரை அறுவைச் சிகிச்சை மற்றும் கண்மாற்று அறுவைச் சிகிச்சை பிரிவு, மகளிர் புற்றுநோய் மருத்துவம், மகளிர் குழந்தையின்மை சிகிச்சை பிரிவு, சுவாச நோய் சிறப்பு சிகிச்சை பிரிவு, கதிர் இயக்க நோய் கண்டறிதல் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, மயக்கவியல், குருதி வங்கி, மத்திய ஆய்வகம், என பல பிரிவுகளில் பல்நோக்கு மருத்துவமனை அமைய உள்ளது.
திருவண்ணாமலையில் பழைய அரசு தலைமை மருத்துமனைக்கு அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை சென்று இடத்தினை தேர்வு செய்தார்.
அப்போது அவருடன் கலெக்டர் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி, மு.பெ.கிரி எம்.எல்.ஏ, திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், ஒன்றிய குழுத் தலைவர் கலைவாணி கலைமணி மற்றும் பலர் உடன் சென்றிருந்தனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை கட்டப்படாத போது கிரிவலப்பாதையில் காமராஜர் சிலை அருகில் இருந்த மேற்கண்ட மருத்துவமனைதான் தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது.
இந்த மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்ட பிறகு பழைய மருத்துவமனை கட்டிடங்கள் பாழடைந்து விட்டன. பல்வேறு அமைப்புகள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு இங்கு அவசர சிகிச்சை மட்டும் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களும், கிரிவலம் செல்லும் பக்தர்கள் பயன் அடைந்தனர்.
இந்நிலையில் ரூ.6 கோடியே 75 லட்சம் செலவில் பழைய மருத்துவமனை வளாகத்தில் ஆயுர்வேதம், சித்தா, ஓமியோபதி இணைந்த ஆயுஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பல மாத காலம் திறக்கப்படாமல் இருந்தது. பிறகு கடந்த ஆகஸ்டு மாதம் திறக்கப்பட்டது. ஆனால் போதிய மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் இப்படி ஒரு மருத்துவமனை செயல்படுவது பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை.
இந்நிலையில்தான் பல கோடி ரூபாயில் பழைய மருத்துவமனை வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.