செங்கம் அருகே லாரி கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட ஏழு பேர் பலியானார்கள்.
இந்த கோர விபத்து குறித்த விவரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராசகடை என்ற ஊரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). தந்தை பெயர் ராஜேந்திரன். இவரது மனைவி காவியா (35). மகன்கள் சர்வேஸ்வரன் (6), சித்து (3). சாப்ட்வேர் என்ஜினீயரான சதீஷ்குமார் பெங்களுரில் வேலை கிடைத்ததும் குடும்பத்தினருடன் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
நேற்று புரட்டாசி அமாவாசையை யொட்டி சதீஷ்குமார் குடும்பத்தினர் காரில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு இன்று அதிகாலை ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
செங்கத்தை தாண்டி அந்தனூர் பைபாஸில் இன்று காலை 8 மணி அளவில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது போச்சம்பள்ளியில் லோடை இறக்கி விட்டு செங்கத்தை நோக்கி வந்து கொண்டிருந்த லாரியும், அந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி சின்னாபின்னமானது. இதே போல் லாரியின் முன்பகுதியும் சேதமானது.
உருக்குலைந்த காரில் பயணம் செய்த 8 பேரில் 7 பேர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சதீஷ்குமாரின் மனைவி காவியா மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீசாரும், தீயணைப்பு துறையினரும் பல மணி நேரம் போராடி அப்பளம் போல் நொறுங்கியிருந்த காரை கடப்பாரையால் பிரித்தெடுத்து உடல்களை மீட்டனர்.
இறந்தவர்கள் விவரம் சதீஷ்குமார் (வயது 42). இவரது மகன்கள் சர்வேஸ்வரன் (6), சித்து (3). சதீஷ்குமாரின் மாமனார் சீனுவாசன் (60), சீனிவாசனின் மனைவி மலர் (53), மகன்கள் மணிகண்டன் (37), ஹேமந்த் குமார்(32)
விபத்து நடந்த பகுதியை கலெக்டர் பா.முருகேஷ், எஸ்.பி கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பிறகு மருத்துவமனைக்கு சென்று காவியாவிற்கு சிகிச்சை அளிக்கப்படும் விவரத்தை டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். அப்போது அண்ணாதுரை எம்.பி, செங்கம் எம்.எல்.ஏ மு.பெ.கிரி, அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன் ஆகியோர் உடனிருந்தனர்.