தீபத்திருவிழா சாமி ஊர்வலத்தின் போது ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கும், தனி நபர்கள் கூட்டமாக இசைக் கருவிகளை வாசிக்கவும், இயக்க கொடிகளை பயன்படுத்தவும், தீப கொப்பறை அருகில் நின்று படம் எடுத்து விளம்பரம் தேடிக் கொள்வதற்கும் தடை விதிக்கப்படும் என கலெக்டர் தலைமையில் நடந்த கார்த்திகை தீபத்திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
துர்க்கையம்மன் உற்சவம்
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 14.11.2023 அன்று துர்க்கையம்மன் உற்சவத்துடன் துவங்கி, தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறவுள்ளது.
17.11.2023 முதல் 26.11.2023 வரை 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் முதல் நாள் திருவிழா 17.11.2023 கொடியேற்றத்துடன் தொடங்கி, 26.11.2023 அன்று 10ஆம் நாள் உலகமே எதிர்நோக்கும் திருவிழாவான மகாதீப தரிசனம் நடைபெறும். இதைத் தொடர்ந்து 27.11.2023 முதல் 29.11.2023 முடிய மூன்று தினங்களிலும் அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடக்கும்.
இதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் செய்வது குறித்த அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் வருமாறு,
எல்.இ.டி மெகா ஸ்கிரீனில் ஒளிப்பரப்பு
பரணி மற்றும் மகாதீப நிகழ்வுகள் எல்.இ.டி மெகா ஸ்கிரீனில் கிழக்கு இராஜகோபுரம் அருகில் இரண்டு எண்ணிக்கையிலும், மத்திய பஸ் நிலையம் அருகில் நான்கு எண்ணிக்கையிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில், மேற்கு பேகோபுரம் அருகில், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில், பெரிய நந்தி அருகில், கலையரங்கம் அருகில், மகிழமரம் அருகில், உள்துறை அலுவலகம் அருகில், பெரிய தேர் அருகில், அருள்மிகு முனீஸ்வரன் கோயில் அருகில், காந்தி சிலை அருகில் ஆகிய இடங்களில் தலா ஒன்று எண்ணிக்கையிலும் ஒளிபரப்பப்படும்.
பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யபுரவி மண்டபத்திலிருந்து கிளிகோபுரம் வரை நெரிசலின்றி வரிசையாக செல்ல இரும்பு தடுப்புகள் (பேரிகாட்) 120 எண்ணிக்கையில் அமைக்கப்படவுள்ளது. திருக்கோயிலின் உட்புறம் மற்றும் மேற்கு இராஜகோபுரம், வடக்கு இராஜகோபுரம் வெளியிலும், தேவையான இடங்களில், வரிசையில் செல்ல இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து சேவார்த்திகளை ஒருங்கிணைத்து வரிசையாக செல்ல தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.
இத்திருக்கோயிலில் சேவார்த்திகள் பயன்பாட்டிற்காக 63 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், 24 இடங்களில் இலவச கழிவறைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தீபத்திருவிழா 10ம் நாளான 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை காலை பரணி தீப தரிசனம் செய்ய அதிகாலை 4.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரையில் கிழக்கு ராஜகோபுரம் வழியாக பொது தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.
சுவாமி உலாவரும் மாடவீதிகளில் 11 இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு காமிராக்கள் 15 நிறுவப்பட்டு நிகழ்வுகள் கண்காணிக்கப்படவுள்ளது. 10 நாட்கள் திருவிழாவின் போது உற்சவ பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவிற்காக அலங்காரம் செய்யப்படும் திருக்கல்யாணமண்டபத்தில், 14 கண்காணிப்பு காமிராக்கள் நிறுவப்பட உள்ளது.
மிராசுதாரர், பொதுமக்களுக்கு காப்பீடு
கிழக்கு இராஜகோபுரம், தெற்கு இராஜகோபுரம் மற்றும் வடக்கு இராஜகோபுரம் நுழைவு வாயில்களில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டு, காவல்துறையினர் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருவிழா காலங்களில் திருக்கோயில் உட்புற வளாகத்தில் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகளின்போது கூட்ட நெரிசலில் சேவார்த்திகளுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் இழப்பீடுகள் பெறும் வகையில் விபத்து காப்பீடு திட்டத்தின்கீழ் உரிய காப்பீடு செய்யப்படவுள்ளது.
திருத்தேரோட்டங்களின்போது தேரில் அமர்ந்து வரும் அர்ச்சகர்கள், திருக்கோயில் பணியாளர்கள் தேர் சக்கரங்களுக்கு முட்டுக்கட்டை போடும் மிராசுதாரர்கள், திருத்தேரின் பின்புறமாக சன்னக்கட்டை போடும் மிராசுகளுக்கும், பொதுமக்களுக்கும் காப்பீடு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்யப்படவுள்ளது. சுவாமி புறப்பாட்டின்போது பஞ்சமூர்த்திகளின் நகைகள் மற்றும் விலையுயர்ந்தவைகளுக்கு பாதுகாப்பு கருதி காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தேரோட்டத் திருவிழாவில் முதலாவதாக ஸ்ரீவிநாயகர் திருத்தேர் காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் வடம்பிடிக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு தேராக புறப்பாடு செய்யப்படவுள்ளது. ஏழாம் திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகளின் திருத்தேர்கள்மீது பொதுமக்கள் யாரும் ஏறி அமர அனுமதிக்க கூடாது. ஐந்தாம் திருவிழாவின் பெரிய ரிஷப வாகனத்தின் மீது சுவாமி ஏற்றும்போது வாகனம் பின்புறம் பொது மக்களை அனுமதிக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இசை கருவிகள் இசைப்பதற்கு தடை
காலை, மாலை சுவாமி வீதி உலாவின்போது சுவாமிக்கு முன் மிக அருகே டிராக்டர் டிரக்கில் மேடை அமைத்து அதிக இரைச்சலுடன் ஒலிபெருக்கி அமைத்து சில தனியார் நபர்கள் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். அதனால், சுவாமி வீதியுலா செல்வதற்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன், அமைதியற்ற முறையில் பொதுமக்கள் சுவாமியை தரிசனம் செய்யும் நிலை உறுவாகி வருவதை இம்முறை கண்டிப்பாக தடுப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.
காலை, மாலை சுவாமி வீதி உலாவின்போது சுவாமிக்கு முன் இத்திருக்கோயில் ஏற்பாடு செய்யும் நாதஸ்வரம், நபரி, ஒடல், தாளம் தவிர மற்ற தனிப்பட்ட நபர்கள் தனியாக, கூட்டமாக வேறு சில இசை கருவிகளை இசைப்பதை தடுக்க காவல்துறை ஆவன செய்ய வேண்டும்.
காலை, மாலை சுவாமி வீதி உலாவின்போது சுவாமிக்கு முன் நமது திருக்கோயில் பட்டு குடைகள், மகர தோரணம், நந்தி கொடிகள் தவிர மற்ற சில தனிப்பட்ட நபர்கள் தனியாக சில இயக்க உருவம் பதித்த கொடிகளை பிடித்துக்கொண்டு சுவாமியுடன் வருவதை தடுக்க காவல் துறை ஆவன செய்ய வேண்டும்.
27.11.2023, 28.11.2023 மற்றும் 29.11.2023 தெப்பல் உற்சவங்களின் போது பொதுப்பணித்துறையால் அனுமதிக்கப்படும் (காவல்துறையினரையும் சேர்த்து) எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே கண்டிப்பாக தெப்பலில் ஏற காவல்துறை அனுமதிக்க வேண்டும். சிறு குழந்தைகள், 15 வயதுக்கு குறைவானவர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.
26.11.2023 அன்று நடைபெறும் மகாதீபத்திருவிழாவின்போது மலைமீது தீபம் ஏற்றப்பட்டவுடன் பக்தர்கள் சிலர் தீப கொப்பறையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து றூயவளரி மற்றும் குயஉந டீழழமல் வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். இதனை அறவே தடுக்க வேண்டும்.
இவ்வாறு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.