நாளை (08-10-2023) ராகு-கேது பெயர்ச்சி ஆவதையொட்டி திருவண்ணாமலை மலையேறும் பாதையில் உள்ள தண்டபாணி ஆசிரமத்தின் சார்பில் அதன் செயலாளர் ஜோதிட ரத்னா டாக்டர் சீனிவாசன் கணித்துள்ள பலன்கள் வருமாறு,
திடீர் யோகத்திற்கு அதிபதி
நவக்கிரகங்களில் ஸ்ரீ ராகு பகவான் திடீர் யோகத்திற்கு அதிபதி. ஸ்ரீ சனீஸ்வர பகவானின் குணம் கொண்ட இவரை உளமாற வணங்கினால் பெரும் செல்வம், புகழ், அதிகாரம், அரசியல் வெற்றி, எதிரிகளை வெல்லும் ஆற்றல், யோகம், பாட்டனார் சொத்து, வழக்கில் வெற்றி, நோயற்ற வாழ்வு போன்றவற்றை ஸ்ரீ ராகு பகவான் வாரி வழங்குவார். அதே சமயம் ராகு தோஷமுள்ளவர்களுக்கு பலவித இன்னல்களும், புத்திர தடை, திருமண தடை, கணவன்-மனைவி பிரிவு, கல்வியில் தடை, நாகதோஷம், விஷகெண்டம், தீரா வியாதி, அங்கவீனம் ஏற்படுதல் போன்றவை ஏற்படும். விருப்பப்படும் வாழ்க்கை துணை அமைவதில்லை.
ஞானத்திற்கு அதிபதி
ஸ்ரீ கேது பகவான் ஞானத்திற்கு அதிபதி. இவரை உளமாற வணங்குபவர்களுக்கு ஆன்மிக ஞானம், தெய்வ தரிசனம், மோட்சம், லட்சுமி கடாட்சம், உயர்ந்த கல்வி போன்றவை கிடைக்கும். அதே சமயம் கேது தோஷமுள்ளவர்களும் ராகு தோஷமுள்ளவர்களை போன்றே பலவித தடைகளும் இன்னல்களும் பெறுவார்கள்.
நிகழும் சுபஸ்ரீ சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21-ஆம் நாள் 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 3-40 மணிக்கு ஸ்ரீ ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து பெயர்ச்சி அடைந்து மீன ராசியிலும், ஸ்ரீ கேது பகவான் துலாம் ராசியிலிருந்து பெயர்ச்சி அடைந்து கன்னி ராசியிலும் சஞ்சாரம் செய்யத் தொடங்குகிறார்கள். ஸ்ரீ ராகு-கேது பகவான்கள் மேற்கண்ட ராசிகளில் ஒன்றரை வருடங்கள் சஞ்சாரம் செய்வார்கள்.
திருஅண்ணாலையில் மலைச்சாரலில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம பீடாதிபதி பிரம்மரிஷி. வாலைச்சித்தர் (நவப்பாஷாண ஜோதிலிங்கம் பிரதிஷ்டை செய்தவர்) அவர்களின் திருவுளப்படி (இந்த ஆஸ்ரமம் 225 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீசதானந்த யோகீஸ்வரரால் அமைக்கப்பட்ட பழமையான ஆஸ்ரமம்) ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை மற்றும் வாலைச்சித்தர் குருகுல ஜோதிடப் பயிற்சி மாணவர்களின் பெருமுயற்சியினாலும், திருஅண்ணாமலையில் மாபெரும் ஸ்ரீ ராகு-கேது பெயர்ச்சி மஹாயாகம் மலை ஏறும் வழியில் குகை நமச்சிவாயர் குகை கோவிலுக்கு இடதுபுறம் அமைந்துள்ள ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமத்தில் நடைபெற உள்ளது.
உலக நன்மைக்காக யாகம்
ஸ்ரீ ராகு-கேது பகவான்களின் அருளினை உலக உயிரினங்கள் அனைத்தும் பெற்று நலம் பெற யாகங்களும், பூஜைகளும், வஸ்திரதானமும், புத்தக தானமும், நடைபெற உள்ளன. ஸ்ரீ ராகு-கேது பெயர்ச்சி தினத்தன்று 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11-00 மணியளவில் ஸ்ரீ கேது பகவானின் அதிதேவதையான ஸ்ரீ ஞானசித்தி கணபதி ஹோமம் தொடங்கி அதனை தொடர்ந்து ஸ்ரீகேது பகவானின் மற்றொரு அதிதேவதையான ஸ்ரீசித்ரகுப்தர் ஹோமம் நடைபெறும். பிறகு ஸ்ரீ ராகு பகவானின் அதிதேவதைகளான ஸ்ரீ துர்கா ஹோமம், ஸ்ரீ பிரத்தியங்கிரா ஹோமம் நடைபெறும். அதன் பிறகு கடன் தொல்லையிலிருந்து விடுப்பட்டு எதிரிகளை அழித்து, நோய்களிலிருந்து காக்கவல்ல சத்ரு சம்ஹார ஹோமம் மற்றும் ஸ்ரீ அமிர்த மஹாம்ருத்யுஞ்சய ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் நடைபெறும்.
இனி அந்த ஆசிரமத்தின் செயலாளர் ஜோதிட ரத்னா டாக்டர் சீனிவாசன் கணித்துள்ள ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் வருமாறு,
(இந்த ராசிப்பலன்கள் யாவும் பொதுப்பலன்கள் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் ராகு-கேது பலமாகவோ, யோகம் தரும் இடத்தில் அமர்ந்து இருந்தாலோ தீய பலன்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்)
(12-ல் ராகு, 6-ல் கேது)
மேஷ ராசி அன்பர்களே… இந்த ராகு-கேது பெயர்ச்சியானது ஒரளவு நன்மைகளை தரக்கூடியதாகவே தங்களுக்கு அமைந்துள்ளது.மேலும் 12-ல் உள்ள ராகு பகவான் ஒரு சில இழப்புகளையும், ஏமாற்றத்தையும் தருவார். உங்களை சுற்றி ஏமாற்றும் கூட்டம் ஒன்று எப்போதும் இருக்கும். எச்சரிக்கை தேவை.நோய்நொடி, கடன் பிரச்சனை, எதிரிகளால் பிரச்சனை, கணவன்-மனைவி பிரச்சனை நீங்கும். மனதில் தெளிவும், தன்னம்பிக்கையும், தைரியமும் பிறக்கும்.சுறுசுறுப்பாக செயல்பட்டு பலரிடம் பாராட்டு வாங்குவீர்கள்.தொழிலில் நல்ல முன்னேற்றமும், லாபம் ஏற்படும், மாணவர்களுக்கு படிப்பில் இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.ஸ்ரீ சுப்ரமணியர் எந்திரத்தை வழிபட மேலும் நன்மைகள் பெருகும்.
(11-ல் ராகு, 5-ல் கேது)
ரிஷப ராசி அன்பர்களே… இந்த ராகு-கேது பெயர்ச்சி காலமானது தங்களுக்கு பல நன்மைகளை செய்யப்போகிறது.எடுத்த காரியங்களில் வெற்றி, திடீர் யோகம், அதிர்ஷ்ட வாய்ப்புகள், குறுக்கு வழியில் பணம், பாட்டனார் சொத்து, பூர்வீக சொத்து, கோர்டு கேஸ்களில் வெற்றி, மாற்று இனத்தவரால் லாபம் என பலவகை நன்மைகளை லாப ஸ்தானத்திலுள்ள ராகு பகவான் வழங்குவார்.கேது பகவான் 5-ல் இருப்பதால் பிள்ளைகள் வகையில் செலவு ஏற்படும்.மற்றபடி கேதுபகவானும் நன்மைகளைத் தருவார்.பொன் பொருள் சேர்க்கை, நிலம், வீடு, வாகனம் சேர்க்கை ஏற்படும்.மாணவர்களுக்கு படிப்பில் மட்டும் கவனம் இருந்தால் மட்டுமே வெற்றி உறுதி அடையலாம். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை வழிபட மேலும் நன்மைகள் பெருகும்.
(10-ல் ராகு, 4-ல் கேது)
மிதுன ராசி அன்பர்களே, இந்த ராகு-கேது பெயர்ச்சி காலமானது தங்களுக்கு பலவித துன்பங்களை தருவதாகவே அமைந்துள்ளது. தோல்வி, நஷ்டம், பயம், குழப்பம், பகை, நோய்நொடி, கடன், விபத்து, கெண்டம், பொன் பொருள் இழப்பு, எதிரிகளின் தொல்லை ஏற்படும். சில நண்பர்கள் துரோகம் செய்ய நேரிடும். எதிலும் எச்சரிக்கை தேவை, பதவி இழப்பு, விரும்பாத இடமாற்றம், மேலதிகாரிகளின் பகை ஏற்படும். சில பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட நேரிடும்.மாணவர்களுக்கு படிப்பில் மந்த நிலை இருக்கும்.ஸ்ரீ தன்வந்திரி எந்திரத்தை வழிபட தீமைகள் குறையும்.
(9-ல் ராகு, 3-ல் கேது)
கடக ராசி அன்பர்களே, இந்த ராகு-கேது பெயர்ச்சியை பொருத்தவரை தங்களுக்கு ஒரளவு நன்மைகளை தரக்கூடியதாகவே அமைந்துள்ளது. தொழிலில் லாபம், பொன்பொருள் சேர்க்கை போன்றவை ஏற்படும். தந்தைக்கு உடல்நலக்குறைவு, தந்தையுடன் பகை போன்றவை ராகு பகவானால் ஏற்படும். கவலை வேண்டாம் வரும் துன்பங்களை எல்லாம் 3-ல் உள்ள கேது பகவானால் தைரியமாக அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள்.ஸ்ரீ சுப்ரமணியர் எந்திரத்தை பூஜித்து வர தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகும்.
(8-ல் ராகு, 2-ல் கேது)
சிம்ம ராசி அன்பர்களே, தங்களுக்கு அஷ்டமம் எனும் 8-ஆமிடத்தில் ராகு பகவானும், 2-ஆமிடத்தில கேது பகவானும் சஞ்சரிப்பது துயரத்தை தரும். முக்கியமாக விஷ கெண்டம் (Food Posion), விபத்து தரும், தேவையில்லாத பிரச்சனை, வம்பு வழக்கு போன்றவை 8-ல் உள்ள ராகுவால் ஏற்படும். 2-ல் உள்ள கேதுவால் குடும்பத்தில் குழப்பம், தனவரவு தடைபடுதல், வீண் செலவு ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருக்கும். பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானத்தில் ராகு இருப்பதால் துர்க்கைதேவியை தொடர்ந்து வழிபடுவது நல்லது. ஸ்ரீ தன்வந்திரி எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.
(7-ல் ராகு, ஜென்ம கேது)
கன்னி ராசி அன்பர்களே, தங்கள் ராசிக்கு 7-ல் ராகு சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியில் கேது சஞ்சரிப்பதும் மிகுந்த துன்பங்களை தரும்.எதிலும் தோல்வி, நஷ்டம், கணவன்-மனைவி பிரிவு, மன உளைச்சல், கடன் தொல்லை, எதிரிகளின் தொல்லை ஏற்படும். சில நண்பர்கள், பங்குதாரர்கள் துரோகிகளாக மாறுவர். இறைவழிபாடும், கிரக வழிபாடும் அவசியம் தொடர்ந்து தங்களுக்கு தேவை.மாணவர்களுக்கு படிப்பில் மந்த நிலை ஏற்பட்டு, எதிர்பார்க்கும் மதிப்பெண் கிடைக்காமல் போகலாம்.ஸ்ரீ தன்வந்திரி எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.
(6-ல் ராகு, 12-ல் கேது)
துலாம் ராசி அன்பர்களே,, இந்த ராகு-கேது பெயர்ச்சி காலமானது தங்களுக்கு பொற்காலத்தை வழங்க உள்ளது. எதிலும், எங்கும் வெற்றிக்கொடி நாட்டப்போகிறீர்கள்.6-ல் உள்ள ராகு பகவானால் எதிரிகளையும், எதிர்ப்புகளையும் பந்தாடுவீர்கள். சாதனைகள் பல செய்வீர்கள்.நோய்நொடி குணமாகும். கடன் அடைபடும். பொன் பொருள், நிலம், வீடு வாகனம் சேர்க்கை ஏற்படும்.கணவன்-மனைவி ஒற்றுமை குடும்பத்தில் இன்பம் ஏற்படும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திடீர் யோகம், அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும், சிலருக்கு வெளிநாட்டு யோகம் கிடைக்கும். 12-ல் உள்ள கேது பகவானால் தீர்த்த யாத்திரை, ஆன்மிக ஞானம், தெய்வ தரிசனம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். ஸ்ரீ சுப்ரமணியர் எந்திரத்தை பூஜித்து வர நன்மைகள் பெருகும்.
(5-ல் ராகு, 11-ல் கேது)
விருட்சிகம் ராசி அன்பர்களே, இந்த ராகு-கேது பெயர்ச்சியை பொறுத்தவரை தங்களுக்கு நன்மைகள் பல கிடைக்கும். கேது பகவான் லாபஸ்தானத்தில் இருப்பதால் ஆன்மிக வழிகளில், ஆன்மிக விஷயங்களில் தங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் பணவரவு உண்டு. சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நேரிடும். குழந்தைகள் வகையில் செலவு ஏற்படும், இருப்பினும் ஒரு சிலருக்கு காதல் தோல்வி குழந்தையின்மை பிரச்சனை, பூர்வீக சொத்தில் பிரச்சனை ஏற்படும். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை பூஜித்து வர தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகும்
(4-ல் ராகு, 10-ல் கேது)
தனுசு ராசி அன்பர்களே, இந்த ராகு-கேது பெயர்ச்சி காலம் தங்களுக்கு சோதனை காலம் என்றே கூறலாம். வீடு, நிலம், வாகனத்தால் செலவு, இழப்பு ஏற்படும்.கோர்ட்டு கேஸ்களில் தோல்வி, தொழில் செய்யுமிடத்தில் பிரச்சனை, தொழில் நஷ்டம் நண்பர்களால் கூட்டு தொழிலால் பிரச்சனை, கணவன்-மனைவி பிரச்சனை, கடன், நோய் நொடி, டென்ஷன், மேலதிகாரிகளின் பகை, வீண் செலவு என பலவிதமான தீமைத்தரும் பலன்கள் தங்களுக்கு ஏற்படும். எது நடந்தாலும் தைரியமாக. நிதானமாக செயல்படுங்கள்.மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை ஏற்படும். சிலருக்கு கல்வியில் தடையோ, தோல்வியோ ஏற்படும். ஸ்ரீ தன்வந்திரி எந்திரத்தை பூஜித்து வர தீமைகள் குறையும்.
(3-ல் ராகு, 9-ல் கேது)
மகர ராசி அன்பர்களே, இந்த ராகு-கேது பெயர்ச்சிக்காலம் தங்களுக்கு பொற்காலத்தை தருவதாகவே அமைந்துள்ளது. எதிலும் தைரியமாகவும், துணிவாகவும் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். திடீர்யோகம், எதிர்பாராத பண வரவும், சொத்து சேர்க்கை, அதிர்ஷ்ட வாய்ப்புகள் போன்றவை ஏற்படும்.நோய் நொடிகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். இருப்பினும் சகோதரர் வகையிலும், தந்தை வகையிலும் செலவுகள் ஏற்படும்.புகழ், செல்வாக்கு உயரும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை பூஜித்து வர பல நன்மைகள் கிடைக்கும்.
(2-ல் ராகு, 8-ல் கேது)
கும்ப ராசி அன்பர்களே… தங்கள் ராசிக்கு 2-ஆம் இடமான குடும்பம் தன ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிப்பதும், அஷ்டமம் எனும் 8-ஆம் இடத்தல் கேது பகவானும் சஞ்சரிப்பதும், தங்கள் மிகுந்த துன்பத்தை தரும்… குடும்பத்தில் குழப்பம், தன விரயம், வாக்கு தவறுதல், கடன், பொன் பொருள் இழப்பு, விஷகெண்டம், வீண் பிரச்சனைகள் போன்ற தீமையான பலன்கள் ஏற்படும். அனாவசியமாக வார்த்தைகளை விட வேண்டாம். மேலதிகாரிகளின் பகை, விரும்பாத இடமாற்றம். பதவி இழப்பு.அவமானம் போன்றவை ஏற்படும். ஸ்ரீ தன்வந்திரி எந்திரத்தை பூஜித்து வர தீமைகள் குறையும்.
(ஜென்ம ராகு. 7-ல் கேது)
மீன ராசி அன்பர்களே.தங்களின் ஜென்ம ராசியில் ராகு பகவான் சஞ்சரிப்பதும், 7-ல் கேது பகவான் சஞ்சரிப்பதும் மிகுந்த வேதனைகளை தரும். தோல்வி, பயம், நஷ்டம், எதிரிகளின் தொல்லை, கடன் தொல்லை, கணவன்-மனைவி பிரிவு போன்றவற்றை அனுபவிக்க நேரிடும். அரசியலில், அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு பதவி இழப்பு, மேலதிகாரிகளின் பகை, விரும்பாத இடமாற்றம் போன்ற கெடு பலன்கள் ஏற்படும்.மாணவர்கள் படிப்பில் மந்தநிலை இருக்கும்.ஞாபகசக்தி குறைந்து அவதிப்படுவர்.ஸ்ரீ தன்வந்திரி எந்திரத்தை பூஜித்து வர சிரமங்கள் குறையும்.
குறிப்பு– இந்த ராசிப்பலன்கள் யாவும் பொதுப்பலன்கள் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் ஸ்ரீ ராகு-கேது பலமாகவோ, யோகம் தரும் இடத்தில் அமர்ந்து இருந்தாலோ தீய பலன்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும் என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்ளவும்.
தொகுப்பு : “ஜோதிட ரத்னா” “ஆன்மிக செம்மல்”
சித்தர் மகன். Dr.L.சீனுவாசன், M.A.,D.A.,S.M.P., நிறுவனர் மற்றும் செயலாளர், ஸ்ரீதண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை.