திருவண்ணாமலையில் காலி பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைபணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தின் போது சாலை பணியாளர்கள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைபணியாளர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு மாநில தலைவர் மா.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் ச.மகேந்திரன், தி.ராஜமாணிக்கம், கா.ரவி, பெ.முத்து, மாநில துணை செயலாளர்கள் செ.சையது, யூசுப்ஜான், சு.செந்தில்நாதன், கு.பழனிச்சாமி, மா.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை தலைவர் து.சிங்கராயன் அனைவரையும் வரவேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் இரா.பாரி துவக்கவுரையாற்றினார். பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
7 அம்ச கோரிக்கை
சாலை பணியாளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும்.நெடுஞ்சாலை பராமரிப்பு பணிக்கான காலி பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்கிட வேண்டும். பணிநீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர்நீத்த சாலை பணியாளர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நெடுஞ்சாலை துறையிலேயே விரைந்து பணி வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்கள் அனைவருக்கும் தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் ரூ.5200, ரூ.20200 ஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவிதம் ஆபத்துபடி நிரந்தர பயணப்படி சீருடை சலவை படி வழங்கிட வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
நிறைவாக மாநில தலைவர் மு.அன்பரசு சிறப்புரையாற்றினார். இதில் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தோழமை சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், சாலைபணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாநில பொருளாளர் இரா.தமிழ் நன்றி கூறினார்.
கைது செய்ய வந்த போலீசார்
போராட்ட இடத்தில் டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். 3 வேன்களில் அவர்கள் வரவழைக்கப்பட்டனர். போராட்டத்திற்கு அனுமதியில்லை, மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என போலீசார் தெரிவித்தனர். அப்போது அவர்களுடன் சங்க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளும் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவர்களை கைது செய்யாமல் போலீசார் திரும்பி சென்றனர். உண்ணாவிரதத்திற்கு குறிப்பிட்ட போலீசார் மட்டும் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
உண்ணாவிரதத்தின் போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சரே, போராட்டத்தை முடக்குவதற்கு காவல்துறையை கையில் வைத்து மிரட்டுறீங்க, மிரட்டுறீங்க, பணி நீக்க காலத்திலே தொடர்ந்து போராடி மீண்டும் பணியை பெற்றோமே, பீனிக்ஸ் பறவை போல சாலைபணியாளர்கள் எழுவோமே, நெடுஞ்சாலைத்துறை அமைச்சரே நியாமில்லை, நியாமில்லை என கோஷமிட்டனர்.
அமைச்சருக்கு எச்சரிக்கை
முன்னதாக சாலை பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் முத்துராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சாலை பணியாளர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நெடுஞ்சாலை துறையிலேயே கோட்ட பொறியாளர் பணி வழங்க முடியும். ஆனால் அவர்களுடைய கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. மறைமுக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 200 குடும்பங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்த அரசு (திமுக) அமைந்தால் எங்களுக்கு விடியல் ஏற்படுத்தித் தருவோம் என்று சொன்னார்கள். நாங்கள் நம்பி வந்தோம்.இன்றைய நாளில் முதலமைச்சர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த உண்ணாவிரத போராட்டம் துவங்குவதற்கு ஆயத்தமாகி வந்தோம். திடீரென காலை நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது என அறிவிப்பு வந்திருக்கிறது. ஏன் மறுக்கிறீர்கள்? என்று கேட்டால் மேலிடத்து உத்தரவு என்று சொல்கிறார்கள்.
இந்த மாவட்டத்தில் ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கிற அமைச்சர்(எ.வ.வேலு) சொல்லியிருப்பார் என நாங்கள் சந்தேகிக்கிறோம். அமைச்சருக்கு இந்த போராட்டம் நடக்க கூடாது என்ற எண்ணம் இருந்தால் எங்கள் கோரிக்கையை அழைத்து பேசி முடிவெடுக்க வேண்டும். மாறாக எங்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கை இருக்கும் என்று சொன்னால் இதோ அருகில் இருக்கக்கூடிய சுடுகாட்டில் எங்களுடைய போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சரை எச்சரிக்கிறோம்.
அமைச்சர் பேச்சு சரியில்லை
அமைச்சருடைய பேச்சு வழக்கு சரியில்லை. அவர் சங்க நிர்வாகிகளை சந்திக்கிற போது நீ சங்கத்தை நடத்திக்கோ, வசூலித்து சாப்பிட்டு செல் என சொல்கிறார். அமைச்சர் பதவியில் இருக்கக்கூடிய நீங்கள் அரசியலமைப்பில் இருக்கிறீர்கள் அரசியலமைப்பை பயன்படுத்தி சம்பாதித்து நடத்துகிறீர்களா குடும்பத்தை? இது போன்ற பேச்சு வழக்குகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் கோரிக்கைகளை அழைத்து பேசி நிறைவேற்ற வேண்டும்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்த அனுமதித்தால் அமைதியான முறையில் நடத்துவதுவோம். இல்லை என்று சொன்னால் சுடுகாட்டில் போய் உட்கார்ந்து இந்த அரசு வெட்கம் கெட்ட அரசாக, மக்கள் விரோத அரசாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்து வந்த பாதை
நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள், சாலை ஆய்வாளர்கள், அரசு பணியாளர்களாக கருணாநிதி ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டனர். 1996ம் ஆண்டு 10 ஆயிரம் சாலைபணியாளர்கள் பணியிடங்களை கருணாநிதி உருவாக்கினார். 2002ம் ஆண்டு ஜெயலலிதா அவர்களை பணிநீக்கம் செய்தார். இதற்கு எதிராக 41மாதம் போராடி உச்சநீதி மன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு ஜெயலலிதா அவர்களுக்கு பணி வழங்கினார். போராட்ட காலத்தின் போது 84 பணியாளர்கள் இறந்தனர். சாலைபணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததால் மீண்டும் கடுமையான போராட்டத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.