திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஐப்பசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதில், ரூ.2 கோடியே 24 லட்சத்து 41 ஆயிரத்து 224 ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இன்று நடந்தது.
கோயில் இணை ஆணையர் சி.ஜோதி முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், 350க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 60 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. காலை முதல் மாலை வரை உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் ரூ.2 கோடியே 24 லட்சத்து 41 ஆயிரத்து 224ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 188 கிராம் தங்கம், 1.240 கிலோ கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக்கை தொகை அண்ணாமலையார் கோயில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
கடந்த ஆடி மாதம் அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியை தாண்டிய நிலையில் ஆவணி மாதம் இது ரூ.1 கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 ஆக குறைந்தது. புரட்டாசி மாதம் இது மேலும் குறைந்தது. அந்த மாதம் ரூ.90 லட்சத்து 59 ஆயிரத்து 822 மட்டுமே கிடைத்தது.
இந்நிலையில் 2 மாதத்திற்கு பிறகு ஐப்பசி மாதம் அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியை தாண்டியிருப்பது கோயில் நிர்வாகத்தை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.