திருவண்ணாமலை தாசில்தாராக சரளா பதவியேற்று 8 மாதமே ஆன நிலையில் அவரை அதிரடியாக மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதவியேதும் அறிவிக்கப்படாமல் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை தாசில்தாரையும், கீழ்பென்னாத்தூர் தாசில்தாரையும் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
செய்யாறு சிப்காட் தாசில்தாராக இருந்த எஸ்.சரளா திருவண்ணாமலை தாசில்தாராக கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். பதவியேற்று 8 மாதமே ஆன நிலையில் பல்வேறு புகார்களின் காரணமாக அவர் மாற்றப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் ஆக்கிரமிப்பு அகற்றுவதிலும், அரசு இடங்களை கையகப்படுத்துவதிலும் அவர் மெத்தனமாக இருந்ததும் அவரது மாற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
கீழ்பென்னாத்தூர் தாசில்தாராக இருந்த சாப்ஜான், தேர்தல் பிரிவு தாசில்தாராக மாற்றப்பட்டிருக்கிறார். கீழ்பென்னாத்தூர் சமூக பாதுகாப்பு தாசில்தாராக இருந்த ஜெ.சுகுணா கீழ்பென்னாத்தூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
திருவண்ணாமலை தாசில்தாராக திருவண்ணாமலை தேர்தல் பிரிவில் சிறப்பு தாசில்தாராக இருந்த எம்.தியாகராஜன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் உடனடியாக புதிய பதவியில் சேர வேண்டும் எனவும், அவர்களிடம் மாற்றலாகி செல்லும் தாசில்தார் கோப்புகளை ஒப்படைக்க வேண்டும் எனவும், பதவி மாற்றம் அல்லது விடுப்பு வழங்குவதற்கான எந்த ஒரு கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும், புதிய பதவியில் உடனடியாக சேராதது, அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும் எனவும் மாற்றல் உத்தரவில் கலெக்டர் முருகேஷ் எச்சரித்துள்ளார்.